நாடாளுமன்ற தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் சூறாவளி பிரசாரம்


நாடாளுமன்ற தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் சூறாவளி பிரசாரம்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. வருகிற 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஆகும். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 5 நாட்கள் மட்டுமே வாய்ப்பு இருப்பதால் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்து தொகுதிகளை பங்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

இதில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு அடைந்துவிட்டது. தி.மு.க. சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். இதையொட்டி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக இன்று மாலை 4.45 மணிக்கு சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அவர் காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு செல்கிறார். பிரசார பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார்.

இன்று இரவு தஞ்சாவூரில் தனியார் ஓட்டலில் தங்கும் அவர், நாளை (சனிக்கிழமை) தஞ்சை மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். முதல்-அமைச்சர் திருச்சி வருவதையொட்டி இன்று காலை 10 மணி முதல் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.


Next Story