வேலூர், மேட்டுபாளையத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம்
சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் மோடி நேற்று வாகனப் பேரணி நடத்தினார்.
சென்னை,
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் பிரசாரம் களைகட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிககள் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.
இன்று (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து வேலூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.
அதன்பிறகு, கோவை செல்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜனதா வேட்பாளர்கள் எல்.முருகன் (நீலகிரி), அண்ணாமலை (கோவை), கே.வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்), கே.பி.ராமலிங்கம் (நாமக்கல்), கூட்டணி கட்சி வேட்பாளர்களான த.மா.கா.வை சேர்ந்த பி.விஜயகுமார் (ஈரோடு), பா.ம.க.வை சேர்ந்த ந.அண்ணாதுரை (சேலம்) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி வேலூர், கோவை, மேட்டுபாளையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.