இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பிரதமர் மோடி நினைக்கிறார் - ராகுல்காந்தி


இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பிரதமர் மோடி நினைக்கிறார் - ராகுல்காந்தி
x

இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பிரதமர் மோடி நினைப்பதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.

இதையடுத்து, வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தெலுங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 17 தொகுதிகளுக்கும் வரும் 13ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானாவின் அலிதாபாத் தொகுதிக்கு உள்பட்ட நிர்மல் நகரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது,

நரேந்திர மோடி இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர். அவர் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய நினைக்கிறார். இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்தில் இருந்து அதிகரிப்பதுதான் நாட்டின் முன் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்துவோம். பா.ஜ.க. தலைவர்களும் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர நினைக்கின்றனர்.

அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் செயல்பாட்டில் உள்ள ஒப்பந்த முறையை நாங்கள் நீக்குவோம். தற்காலிக வேலைவாய்ப்பு இல்லாமல் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவோம்.

அரசியலமைப்பு சட்டம் முடிவுக்கு வந்தால், இடஒதுக்கீடும் முடிவுக்கு வந்துவிடும். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், ஆதிவாசி மக்கள் தொடர்ந்து பின் தங்கிய நிலையிலேயே இருக்க பா.ஜ.க. விரும்புகிறது

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story