பிரதமருக்கு 4 ஆயிரம் எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும்; வைரலான நிதிஷ் குமார் பேச்சு


பிரதமருக்கு 4 ஆயிரம் எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும்; வைரலான நிதிஷ் குமார் பேச்சு
x

நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் தங்களுடைய எல்லா வாக்குகளையும் பிரதமர் மோடிக்கு செலுத்துவார்கள் என்று நிதிஷ் குமார் பேசினார்.

பாட்னா,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலை முன்னிட்டு, பீகாரின் நவாடா நகரில் இன்று நடந்த பொது கூட்டமொன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருடன், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரும் ஒன்றாக மேடையை பகிர்ந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில், நிதிஷ் குமார் மேடையில் பேசும்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் தங்களுடைய எல்லா வாக்குகளையும் பிரதமர் மோடிக்கு செலுத்துவார்கள். பிரதமருக்கு 4 ல... என பேச்சை தொடங்கி சற்று நிறுத்தி (சுய ஆய்வு செய்து கொண்டு), 4 ஆயிரம் எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும் என்றார்.

நாடாளுமன்ற மக்களவைக்கான மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்கள் வரை கிடைக்கும் என பிரதமர் மோடி பிரசாரத்தின்போது கூறி வருகிறார்.

இந்நிலையில், நிதிஷின் இந்த பேச்சு சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. இதன்பின் மேடையில் இருந்த தலைவர் ஒருவர், நீங்கள் நல்ல முறையில் பேசி விட்டீர்கள். நான் பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார் என்று கூறியதும், நிதிஷ் குமார் புன்னகையை வெளிப்படுத்தினார்.

ஏறக்குறைய 25 நிமிடங்கள் வரை அவர் பேசினார். அப்போது ஒரு கட்டத்தில், உரையை சீக்கிரம் முடிக்கும்படி, மேடையின் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவரான வி.கே. சவுத்ரி சைகை காட்டினார்.

பிற தலைவர்கள் பலரும், நிதிஷ் உரையை முடிக்கும் வரை பொறுமையிழந்தபடி காத்திருந்தனர். சிலர் எழுந்து நின்றனர். எனினும், சில நிமிடங்கள் பேசிய பின்னரே, நிதிஷ் தன்னுடைய உரையை முடித்து கொண்டார். இதன்பின் இருக்கைக்கு திரும்பிய நிதிஷ் புன்னகைத்தபடி, பிரதமர் மோடியின் கால்களை தொட்டார்.


Next Story