தேர்தல் பிரசாரத்திற்காக நெல்லை வந்தடைந்தார் ராகுல் காந்தி


தினத்தந்தி 12 April 2024 9:55 AM GMT (Updated: 12 April 2024 10:43 AM GMT)

நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி தமிழகம் வந்தடைந்தார்.

நெல்லை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் ராகுல் காந்தி பேசுகிறார். மேலும் ராகுல் காந்தியுடன் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் நெல்லை பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை வந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மதுரையிலிருந்து ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி நெல்லை புறப்பட்டார்.

இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்வதற்காக நெல்லை வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர். பொதுக்கூட்டம் நடைபெறும் பெல் மைதானத்திற்கு ராகுல் காந்தி திறந்தவெளி வாகனத்தில் செல்கிறார். ராகுல் காந்தி வருகையையொட்டி நெல்லையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் நாள் நெருங்கியுள்ள நிலையில் இந்தப் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்


Next Story