கூட்டத்தில் இருந்து யாராவது எழுந்து போனீங்கனா ரத்தம் கக்கி சாவீங்க - செல்லூர் ராஜு கலகல பேச்சு
தமிழகம் மற்றும் புதுவையில் அ.தி.மு.க. 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.
மதுரை,
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அ.தி.மு.க.வை பொறுத்தவரை, தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
தமிழகம்,புதுவையில் 33 தொகுதிகளில் அ.தி.மு.க நேரடியாக போட்டியிடுகிறது. மொத்தமாக 35 வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகின்றனர். மதுரை மக்களவை தொகுதியில் டாக்டர் சரவணன் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் செல்லூர் ராஜு பேசிக் கொண்டிருந்தபோது அ.தி.மு.க.,வினர் சிலர் கூட்டத்தில் இருந்து கலைந்து செல்ல ஆரம்பித்தனர். இதையடுத்து, கூட்டத்தில் இருந்து எழுத்த தொண்டர்களை அமருமாறு நிர்வாகிகள் மேடையில் இருந்து அறிவுறுத்தினர்.
இதையடுத்து பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,
நான் பேச துவங்குகிறேன். கூட்டத்தில் நான் பேசும்போது இடையில் யாரும் பேசக்கூடாது. நடுவுல எழுந்து போகக்கூடாது. போனா வீடு போய்ச் சேர்வதற்குள் ரத்தம் கக்கி சாவீங்க. 5 நிமிடம் டைம் தருகிறேன். அப்போது எழுந்து போகலாம். நான் ஒரு மந்திரம் போட்டு விட்டுத்தான் கூட்டத்திற்கு வந்தேன் என கலகலப்பாகப் பேசினார்.
இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் செல்லூர் ராஜு விட்ட சாபத்தால் முதலில் பீதி அடைந்து, பின்னர் நகைச்சுவையை உணர்ந்து வாய்விட்டுச் சிரித்தனர். வேட்பாளர் டாக்டர் சரவணனும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பொதுக் கூட்டங்களிலும் சரி, பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி, ஜாலியாக கமெண்ட் அடிப்பது செல்லூர் ராஜூவின் வழக்கம். அந்தவகையில், தேர்தல் நெருங்கும் பரபரப்பான சூழலிலும், கூட்டங்களில் நகைச்சுவை கமெண்ட்களை அடித்து அ.தி.மு.க.,வினரை குதூகலப்படுத்தி வருகிறார் செல்லூர் ராஜு. செல்லூர் ராஜுவின் கமெண்ட்டால் தேர்தல் சூட்டுக்கு மத்தியில் மதுரையில் அ.தி.மு.க.வினர் குளிர்ந்து வாய்விட்டு சிரித்தனர்.