முதல்-மந்திரி பங்கேற்ற சாலை பேரணியில் கைத்துப்பாக்கியுடன் வந்த காங்கிரஸ் தொண்டரால் பரபரப்பு
பெங்களூரு தெற்கு தொகுதியில் முதல்-மந்திரி சித்தராமையா பிரசாரம் மேற்கொண்டார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக வருகிற 26 மற்றும் மே 7-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூரு வடக்கு தொகுதியில் நேற்று முன்தினம் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
இந்தநிலையில், பெங்களூரு தெற்கு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சவுமியா ரெட்டியை ஆதரித்து நடைபெற்ற வாகன பேரணியில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது, காங்கிரஸ் தொண்டர் ஒருவர் இடுப்பில் கைத்துப்பாக்கியை சொருகியபடி, முதல்-மந்திரி சென்ற வாகனத்தில் ஏறி அவருக்கு திடீரென மாலை அணிவித்தார்.
இது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, போலீசார் விசாரித்ததில், அவர் உரிமம் பெற்ற பிஸ்டல் வைத்திருப்பது தெரியவந்தது. காவல்துறை அலட்சியமாக இருந்தது குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். பெங்களூரில் முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்ற சாலைப் பேரணியில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் வந்து மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.