"இந்த விவசாயி எதற்கும் அஞ்சாதவன்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஓர் ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை தொட்டு கூட பார்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஆரணி,
ஆரணி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆரணி, செய்யாறு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாலும் நெசவாளர்கள், விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இந்த தொழிலை நம்பியே அவர்கள் வாழ்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் இத்தொழிலை முழுமையாக அழித்து விட்டார்கள். இந்த தொழில் புத்துணர்ச்சி பெறும் வகையில் ஜி.வி.கஜேந்திரனை வேட்பாளராக அறிவித்துள்ளோம். அதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் நம்பிக்கை சின்னமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னம் உள்ளது. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். அ.தி.மு.க.வை முடக்க எவ்வளவோ தடைகளை செய்தார்கள். அவை அனைத்தையும் தகர்த்து எறிந்து விட்டு இப்போது வெற்றி கொடி நாட்ட எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியை, ஜெயலலிதாவை தொடர்ந்து தொண்டர்கள் காத்து வருகின்றனர்.
ஒரு ஸ்டாலின் அல்ல, ஓர் ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை தொட்டு கூட பார்க்க முடியாது. நான் ஒரு விவசாயி. வேளாண்மை உற்பத்தி பற்றி எனக்கு நன்றாக தெரியும், ஆனால் விவசாயத்தைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என ஸ்டாலின் கிண்டல் அடிக்கிறார். ரத்தத்தை வியர்வையாக சிந்தி விவசாயிகள் எப்படி பாடுபடுகிறார்கள் என்று விவசாயியான எனக்கு தெரியும்.
மத்திய ஆட்சியாளர்கள் சொல்லும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என எதற்கும் பயப்படாதவன் இந்த விவசாயி எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க.வில் கீழே இருப்பவர்கள் மேலே வரலாம். மேலே இருப்பவர்கள் பதவியில் அமரலாம், அது அ.தி.மு.க.வில் மட்டும் தான் முடியும். இவ்வாறு அவர் பேசினார்.