மம்தா பானர்ஜி குறித்து அவதூறு கருத்து - பா.ஜ.க. வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


மம்தா பானர்ஜி குறித்து அவதூறு கருத்து - பா.ஜ.க. வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x

மம்தா பானர்ஜி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தம்லுக் தொகுதி பா.ஜ.க. வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா,

முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனிடையே கடந்த 15-ந்தேதி ஹல்தியா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குறித்து தரக்குறைவான முறையில், மிகவும் மோசமான விமர்சனத்தை முன்வைத்ததாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக பா.ஜ.க. வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய் வரும் 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், அபிஜித் கங்கோபாத்யாய் பேசிய கருத்துக்கள் முறையற்ற, கண்ணியமற்ற வகையிலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story