மேற்கு வங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 3-ம் கட்ட தேர்தல் வரும் 7-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள கானாகுல் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மிதாலி பாக் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவரது கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவரது கார் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்தன.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மிதாலி பாக்கின் வாகனத்தை பா.ஜ.க.வினர் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.