மத்திய பிரதேசத்தில் வாக்களிக்க சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு


மத்திய பிரதேசத்தில் வாக்களிக்க சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு
x

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை என மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையர் அனுபம் ராஜன் தெரிவித்துள்ளார்.

போபால்,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 2-வது கட்ட தேர்தல் 26-ந் தேதியும் நடந்தது. இரு கட்டங்களிலுமாக 190 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது.

அடுத்ததாக 3-வது கட்ட தேர்தல் குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியை சேர்ந்த ராஜ்வர்தன் காதிக் (வயது 25) என்பவர் தனது வாக்கினை செலுத்துவதற்காக பி.டி.ஐ. சாலையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மகாவீர் நகர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், ராஜ்வர்தன் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அதே இடத்தில் ராஜ்வர்தன் சரிந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் குவாலியரில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வாக்குச்சாவடி மையத்திலிருந்து 400 மீட்டருக்கு அருகிலேயே நடைபெற்றுள்ளதால் வாக்காளர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாநில தேர்தல் ஆணையர் அனுபம் ராஜன், இந்த சம்பவத்திற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ராஜ்வர்தனுக்கும் மற்றொரு குழுவினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. அந்த முன் விரோதத்தில் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், மற்றபடி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story