வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு


வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
x
தினத்தந்தி 22 Aug 2025 10:48 AM IST (Updated: 22 Aug 2025 11:38 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் திடீரென மழை பெய்ததற்கு வெப்பசலனமே காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையிலேயே கனமழை கொட்டி தீர்த்தது. துரைப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், கோடம்பாக்கம், தியாகராய நகர், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், சேலையூர், தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், புழல், உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

அதிகபட்சமாக சென்னை துரைப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரத்தில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது. இதைபோல அடையாறு 9 செ.மீ., ஈஞ்சம்பாக்கம், பள்ளிக்கரணை தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது; மேடவாக்கம் 7.5 செ.மீ., நுங்கம்பாக்கம் 6.7 செ.மீ., நீலாங்கரை, வேளச்சேரி தலா 6 செ.மீ., எழும்பூரில் 45 மி.மீட்டரும், அயனாவரத்தில் 38 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் வருகிற 25-ம் தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அதற்கடுத்த 2 நாட்களில் வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் திடீரென மழை பெய்ததற்கு வெப்பசலனமே காரணம் என்றும் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக வரும் நாட்களில் மழை தொடரும் என்றும் இன்றிரவு மற்றும் நாளை இரவில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story