தீபாவளி தினத்தில் மழை இருக்குமா..? வானிலை மையம் சொல்வதென்ன..?

வடகிழக்கு பருவமழை 16-ந் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பது தொடர்பான முன் கூட்டிய வானிலை குறித்த அறிவிப்பை தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா நேற்று வெளியிட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “தென்மேற்கு பருவமழை 16-ந் தேதி முதல் 18-ந்தேதிக்குள் இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதேசமயம் வளிமண்டல கீழடுக்கில் மேற்கு திசை காற்று வீசுகிறது. அது கிழக்கு வடகிழக்கு காற்றாக வீசும்போது, தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.
அந்தவகையில் வருகிற 16-ந் தேதி முதல் 18-ந் தேதிக்குள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரும்பாலான ஆண்டுகள் இயல்பைவிட அதிகமாகவும், 2 ஆண்டுகள் இயல்பைவிட குறைவாகவும் பெய்திருக்கிறது.
தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பைவிட அதிகமாகவும் பெய்ய வாய்ப்புள்ளது. தென்மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பைவிட குறைவாகவும் பதிவாக வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த கால கட்டங்களில் 44 செ.மீ. மழை பதிவாகும். இந்த ஆண்டு 50 செ.மீ. வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகத் துல்லியமாக இந்த இடத்தில் மழை பெய்யும் என்று கணிக்கும் நிலை என்பது தொடர்ந்து நமக்கு சவாலாகவே உள்ளது.
இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
வடதமிழக கடலோரம், வடக்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய பகுதிகளிலும் நிலவும் 2 வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்” என்று அவர் கூறினார்.
தீபாவளி தினத்தில் மழை இருக்குமா..?
வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி தினத்தன்றும், அதற்கு முந்தைய நாளும் மழை இல்லாமல் இருந்தால் தீபாவளியை நம்பி இருக்கும் வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். எனவே ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று மழை இருக்குமா? என்ற கேள்வி பலருடைய மனதில் எழும். வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா கூறுகையில், “5 நாட்கள் முன் கூட்டிய கணிப்பில்தான் அதனை சரியாக சொல்ல முடியும். எனவே இப்போது அதனை உறுதியாக சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில், ‘அக்டோபர் 20-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 2011-ம் ஆண்டு அக்டோபர் 26-ந்தேதி தீபாவளி தினத்தில் கனமழை கொட்டியது. வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதிக்கு இடையில் காற்று சுழற்சி காரணமாக வட தமிழ்நாட்டில் மழைக்கான சூழல் இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறுகையில், “தீபாவளி பண்டிகையையொட்டி வியாபாரிகளை பாதிக்கும் அளவுக்கு கனமழைக்கு வாய்ப்பு குறைவுதான். என்றாலும், ஓரிரு இடங்களில் கனமழையோ அல்லது இடி மின்னலுடன் வெப்பச்சலன மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளில் 2011-ம் ஆண்டில் மட்டும் தீபாவளி தினத்தில் கன மழை கொட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






