‘கஜா’ புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரும் மனு மீது அவசர விசாரணை; மத்திய–மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


‘கஜா’ புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரும் மனு மீது அவசர விசாரணை; மத்திய–மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 21 Nov 2018 4:45 AM IST (Updated: 21 Nov 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரும் மனுவை அவசர வழக்காக மதுரை ஐகோர்ட்டு நேற்று எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தியது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

மதுரை,

ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இதுவரை இயற்கை பேரிடர் மேலாண்மை குழு செல்லவில்லை. ஆனால் மத்திய அரசின் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்கள் பல்வேறு மாநிலங்களில் நிரந்தரமாக உள்ளன.

தமிழக கடலோர மாவட்டங்களில் அதுபோன்ற நிவாரண முகாம்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

மத்திய அரசின் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்களை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைக்க வேண்டும். புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மீட்புப்பணியில் முப்படையினரையும், துணை ராணுவ படையினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று பகல் 1 மணி அளவில் அவசர வழக்காக நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர். கஜா புயல் சேதங்களை சீரமைப்பதற்காக மத்திய அரசிடம், மாநில அரசு என்னென்ன உதவிகள் கோரியது? அதன் அடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு உடனடியாக செய்து தர வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை 4 மாவட்ட கலெக்டர்களும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 22–ந் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.


Next Story