3 மணி நேரம் நடந்தது புழல் சிறையில் போலீசார் அதிரடி சோதனை; செல்போன்கள், கஞ்சா பறிமுதல்


3 மணி நேரம் நடந்தது புழல் சிறையில் போலீசார் அதிரடி சோதனை; செல்போன்கள், கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 6:44 PM GMT)

புழல் சிறையில் போலீசார் 3 மணி நேரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

செங்குன்றம்,

புழல் சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் மற்றும் பெண் கைதிகளை அடைக்க தனித்தனி சிறைகள் உள்ளன. சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன், கஞ்சா தாராளமாக கிடைப்பதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்து உள்ளன. சிறைக்குள் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சிறைக்குள் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு டி.வி.க்கள், எப்.எம்.ரேடியோக்கள், பிரியாணி செய்ய பயன்படுத்தும் அரிசி, மெத்தை உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனை முடிந்த பிறகும் புழல் சிறையில் மீண்டும் அதே நிலை நீடிப்பதாக சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதனுக்கு தகவல் வந்தது. உடனடியாக அவர், புழல் சிறையில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி மாதவரம் துணை கமி‌ஷனர் கலைசெல்வன் மேற்பார்வையில் புழல் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் தலைமையில் புழல் இன்ஸ்பெக்டர் நடராஜ், 20 சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 60–க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரம் புழல் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் விசாரணை சிறையில் 100 கிராம் கஞ்சா பொட்டலங்களும், தண்டனை சிறையில் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதிகளுக்கு சிறைக்குள் கஞ்சா, செல்போன்கள் வந்தது எப்படி? என்பது குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த அதிரடி சோதனை குறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது, ‘‘இந்த அதிரடி சோதனை குறித்து சிறை போலீசாருக்கு தகவல் கிடைத்து விட்டதால் செல்போன், கஞ்சா பயன்படுத்தும் கைதிகளை உஷார்படுத்திவிட்டனர். இதனால் அவர்கள் பயன்படுத்திய செல்போன்களையும், கஞ்சாவையும் பத்திரப்படுத்திவிட்டனர்’’ என்றார்.

புழல் விசாரணை சிறையில் 2,700–க்கும் மேற்பட்ட கைதிகளும், தண்டனை சிறையில் 670–க்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 160–க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

விசாரணை சிறையில் 154 குண்டர் தடுப்பு சட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். நிர்வாக செயல்பாட்டுக்காக நேற்று முன்தினம் இரவு 154 குண்டர் தடுப்பு சட்ட கைதிகளும் பாதுகாப்பாக விசாரணை சிறைக்கு மாற்றப்பட்டனர்.


Next Story