"வஞ்சகத்தை தவிர காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எதையும் கொடுக்கவில்லை" - பிரதமர் மோடி சாடல்


வஞ்சகத்தை தவிர காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எதையும் கொடுக்கவில்லை - பிரதமர் மோடி சாடல்
x

Image Courtacy: PTI

தினத்தந்தி 4 Nov 2023 7:07 PM GMT (Updated: 4 Nov 2023 7:33 PM GMT)

மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

ராய்ப்பூர்,

தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதியை கடந்த 9-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி சத்தீஷ்காரில் வரும் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்துக்கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்காரில் முதல் கட்டத்தில் 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்டத்தில் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சத்தீஷ்காரில் துர்க் என்ற இடத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அதில் பேசிய அவர், "சில நாட்களுக்கு முன் ராய்ப்பூரில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டது. அந்த பதுக்கலில் ஈடுபட்ட சூதாட்டக்காரர்களுக்கும், பந்தயம் கட்டுபவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதை சத்தீஷ்கர் மக்களுக்கு, காங்கிரஸ் அரசும், மாநில முதல்-மந்திரியும் சொல்ல வேண்டும். சத்தீஷ்கரில் ஏழைகளை சூறையாடியவர்கள் மீது பாஜக ஆட்சி பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்கும்.

ஊழல் செய்து, ஒன்றன்பின் ஒன்றாக மோசடியில் சிக்கி சத்தீஷ்கர் அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. வஞ்சகத்தை தவிர ஏழைகளுக்கு காங்கிரஸ் வேறு எதையும் கொடுத்தது இல்லை.

80 கோடி ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில், அது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இது வெறும் ஒரு தேர்தல் அறிவிப்பு அல்ல, இது மோடியின் உத்தரவாதம். தங்கள் குடும்பத்துக்காக வீட்டை விட்டு தொலைதூரத்தில் சென்று உழைக்கும் மக்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வழியாக இந்த இலவச ரேஷனை பெற முடியும்" என்று அவர் கூறினார்.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கைக் குறிப்பிட்டு நாத்தின் அறிக்கையை கிண்டலடிக்கும் வகையில், "இரண்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே ஆடைகளை கிழிக்கும் போட்டி நடக்கிறது". இது ஒரு 'டிரெய்லர்' மட்டுமே. டிசம்பர் 3 ஆம் தேதி (வாக்குகள் எண்ணப்படும்) பாஜகவின் வெற்றிக்குப் பிறகு, காங்கிரசின் உண்மையான படம் இங்கே தெரியும், காங்கிரசுக்குள் உண்மையான மோதல் வெளிப்படும்" என்று பிரதமர் மோடி கூறினார்.


Next Story