தேர்தலில் போட்டியிட முடியாதவாறு கட்சியை முடக்க சதி - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு


தேர்தலில் போட்டியிட முடியாதவாறு கட்சியை முடக்க சதி - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

Image Courtacy: PTI

ஜனநாயக கோட்பாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க முயற்சி நடக்கிறது.

புதுடெல்லி,

கடந்த 2018-2019 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானவரி கணக்கை காங்கிரஸ் கட்சி தாமதமாக தாக்கல் செய்தது. அதற்கு அபராதமாக ரூ.210 கோடி செலுத்துமாறு வருமானவரித்துறை கோரியது. அதற்காக காங்கிரஸ் கட்சியின் 11 வங்கிக்கணக்குகளை முடக்கும் உத்தரவை வருமானவரித்துறை கடந்த 14-ந் தேதி பிறப்பித்தது. இருப்பினும், வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை காங்கிரஸ் அணுகியது. வங்கிக்கணக்குகளை இயக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இருப்பினும், காங்கிரசின் 5 வங்கிக்கணக்குகளில் இருந்து வருமானவரித்துறை ரூ.65 கோடி எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், பொருளாளர் அஜய் மக்கான் ஆகியோர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி காங்கிரஸ் கட்சி வருமானவரி கணக்கு தாக்கல் செய்தது. அதற்கு 5 ஆண்டுகள் கழித்து, பணம் எடுக்கும் நடவடிக்கையை வருமானவரித்துறை எடுத்துள்ளது. அதிலும், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 2 வாரங்களே இருக்கும்போது பணத்தை எடுத்துள்ளது.

வருமானவரித்துறை மூலமாக மத்திய அரசு எங்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்படி, வங்கிகளை பா.ஜனதா நிர்பந்தம் செய்து, காங்கிரசின் வங்கிக்கணக்குகளில் உள்ள ரூ.65 கோடியை அரசு கணக்குகளுக்கு மாற்ற வைத்துள்ளது. தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முந்தைய நாள், வருமானவரி அதிகாரிகள் வங்கிக்கு சென்று மிரட்டி, டி.டி. மூலம் பணத்தை எடுத்துள்ளனர்.

இந்த பணம், பொதுமக்கள் மற்றும் கட்சிக்காரர்களிடம் நன்கொடை மூலம் திரட்டிய பணம். இது, காங்கிரஸ் மீதான வரி பயங்கரவாத தாக்குதல். நிதி பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொருளாதார ரீதியாக முடக்க மத்திய அரசு சதி செய்கிறது. அதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதவகையில் காங்கிரசை தடுக்க நினைக்கிறது.

இது நிச்சயமாக ஜனநாயக படுகொலை முயற்சி. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை சர்வாதிகார ராஜ்யத்துக்கு இழுத்து செல்கிறது. பாரத ஒற்றுமை நீதி யாத்திரை, விவசாயிகள் போராட்டம், பணவீக்க உயர்வு ஆகியவற்றால் காங்கிரஸ் வலுவடைந்து இருப்பதால், அதை தடுத்து நிறுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது.

ஜனநாயக கோட்பாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க முயற்சி நடக்கிறது. இவ்வளவு தரம்தாழ்ந்த தாக்குதல், வரலாற்றில் எப்போதும் நடந்தது இல்லை. இதை எதிர்த்து போராடுவோம். பா.ஜனதா வருமானவரி செலுத்தி இருக்கிறதா? அப்படி செலுத்தாவிட்டால், காங்கிரசிடம் இருந்து மட்டும் பணம் எடுப்பது ஏன்? நாங்கள் தீர்ப்பாயத்தை அணுகி இருக்கிறோம். சட்ட நடவடிக்கை எடுப்போம். பா.ஜனதாவின் சர்வாதிகாரத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story