வெளியுறவு கொள்கையை மத்திய அரசு தவறாக கையாண்டது... சீனா, பாகிஸ்தானை ஒன்றிணைத்துவிட்டது - ராகுல்காந்தி
வெளியுறவு கொள்கையை மத்திய அரசு தவறாக கையாண்டதால் சீனா, பாகிஸ்தான் ஒன்றிணைந்துவிட்டது என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது டெல்லியை சென்றடைந்துள்ளது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.
தற்போது, கிறிஸ்துமஸ் - புத்தாண்டையொட்டி யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இடைவேளைக்கு பின் நாளை மறு தினம் (3-ம் தேதி) யாத்திரை மீண்டும் டெல்லியில் இருந்து தொடங்குகிறது.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் சீனாவுடனான எல்லைப்பிரச்சினை குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அனுமதி மறுப்பது குறித்து ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, கடந்த அரசுகளின் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகள் வெற்றிகரமாக சீனாவையும், பாகிஸ்தானையும் பிரித்து வைத்திருந்தன. இது தான் எங்கள் கூட்டணி அரசின் மைய கருத்தாக இருந்தது.
இன்று பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து விட்டன. இது சாதாரண விஷயம் அல்ல. இது மிகவும் ஆபத்தான விஷயம். நமது வெளியுறவு கொள்கையின் நீண்ட உள்கட்டமைப்பை புரிந்து கொள்ளாததால் நமது அரசு வெளியுறவு கொள்கையை தவறாக கையாண்டு சீனா, பாகிஸ்தானை ஒன்றிணைத்து விட்டது.
சீனா, பாகிஸ்தானை ஒன்றிணைத்து விட்டது. இரு நாடுகளும் ஒன்று சேர்ந்ததால் ஏதேனும் நடக்க ஆபத்து உள்ளது. முதலில் டோக்லாம், இரண்டாவது லடாக். எனது எண்ணம் என்னவென்றால் இது தயார் (போருக்கு சீனா தயாராகும் நிலை) நிலையாக இருக்கலாம். அவ்வாறு இல்லை என்றால் நல்லது. ஆனால், அவர்கள் தயாராகுகிறார்கள் (சீனா போருக்கு) என்று நான் நினைகிறேன். நமது அரசு தயாராக இருக்க வேண்டும் (போருக்கு) என்று நான் அரசுக்கு கூறுகிறேன்' என்றார்.