"என்னால் ஜே.இ.இ. படிக்க முடியாது, மன்னித்து விடுங்கள்": பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை


என்னால் ஜே.இ.இ. படிக்க முடியாது, மன்னித்து விடுங்கள்: பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 29 Jan 2024 11:24 AM GMT (Updated: 29 Jan 2024 11:36 AM GMT)

மாணவியின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டா (ராஜஸ்தான்),

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில் சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் கோட்டா நகரில் பயின்று வந்த 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களுக்கு ராஜஸ்தான் அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஜே.இ.இ.க்கு தயாராகி வந்த 18 வயது மாணவி ஒருவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து மாணவியின் அறையில் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், 'நான் தோற்றவள். நான் மோசமான மகள். அம்மா.. அப்பா... என்னை மன்னித்துவிடுங்கள். யாஹி கடைசி விருப்பம்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்கொலைக் குறிப்பில் அவர் படிப்பு தொடர்பாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தேர்வை சமாளிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாணவி மூன்று சகோதரிகளில் மூத்தவர் ஆவார். அவரது தந்தை கோட்டாவில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காவலாளியாக உள்ளார். முன்னதாக அந்த சிறுமி ஓரிரு நாட்களில் ஜே.இ.இ. தேர்வை எழுத இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்திற்குள் கோட்டாவில் நடந்த இரண்டாவது சந்தேகத்திற்கிடமான தற்கொலை இதுவாகும். மாணவியின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story