'பா.ஜ.க.வின் 9 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் கடன் ரூ.100 லட்சம் கோடி அதிகரிப்பு' - காங்கிரஸ் குற்றச்சாட்டு


பா.ஜ.க.வின் 9 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் கடன் ரூ.100 லட்சம் கோடி அதிகரிப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

நரேந்திர மோடி பிரதமரான பிறகு நாட்டின் கடன் ரூ.155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை பா.ஜ.க. அரசு சீரழித்துவிட்டதாகவும், இதன் காரணமாக மிகப் பெரிய அளவில் வேலையின்மை உருவாகி இருப்பதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. மோடி பதவியேற்பதற்கு முன் நாட்டின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது.

அதாவது, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பிரதமராக பதவி வகித்த 14 பிரதமர்கள் வாங்கிய மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி. ஆனால், நரேந்திர மோடி பிரதமரான பிறகு அவரது ஆட்சிக் காலத்தில் மட்டும் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் கடன் ரூ.155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

மோடி அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை சீரழித்துவிட்டது. இதன் காரணமாக மிகப் பெரிய அளவில் வேலையின்மை உருவாகி இருக்கிறது; பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. ரூ.100 லட்சம் கோடி கடன் என்பது ஆபத்தான அளவு. நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவு நாட்டிற்கு கடன் சுமையை மோடி அரசு ஏற்படுத்தி இருக்கிறது.

நரேந்திர மோடி அரசு ஊடகங்களை திறமையாகக் கையாண்டு பொய்களை உரக்கச் சொல்லி வருகிறது. தனது அரசியல் எதிரிகளை திறமையற்றவர்கள், ஊழல்வாதிகள் என்றெல்லாம் விமர்சித்தவர் நரேந்திர மோடி. இந்த வார்த்தைகள் தற்போது வேறு யாரையும்விட அவருக்கும் அவரது அரசுக்குமே பொருத்தமாகி இருக்கிறது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்."

இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் தெரிவித்துள்ளார்.


Next Story