ஆந்திர என்ஜினீயரை கடத்தி ரூ.23 லட்சம் நகை-பணம் கொள்ளை


ஆந்திர என்ஜினீயரை கடத்தி  ரூ.23 லட்சம் நகை-பணம் கொள்ளை
x

சிக்பள்ளாப்பூர் அருகே ஆந்திர என்ஜினீயரை கூலிப்படையை ஏவி கடத்தி ரூ.23 லட்சம் நகை-பணத்தை காதலியே கொள்ளையடித்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு:

சிக்பள்ளாப்பூர் அருகே ஆந்திர என்ஜினீயரை கூலிப்படையை ஏவி கடத்தி ரூ.23 லட்சம் நகை-பணத்தை காதலியே கொள்ளையடித்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆந்திராவை சேர்ந்த என்ஜினீயர்

ஆந்திர மாநிலம் அனந்தப்பூரை சேர்ந்தவர் விஜய்சிங் (வயது 32). இவர் பெங்களூருவில் தங்கியிருந்து ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாவனா ரெட்டி என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவர் இடையேயும் காதல் மலர்ந்தது.

இதனால் அடிக்கடி காதல் ஜோடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். மேலும் தனியார் நிறுவனத்தில் ேவலை பார்த்த விஜய்சிங்கிடம் அதிக பணம் இருந்துள்ளது. இதனால் காதலியை வெளியே அழைத்து செல்லும்போது அவர் பணத்தை செலவழித்து வந்ததாக தெரிகிறது.

பணம் பறிக்க திட்டம்

இதற்கிடையே விஜய்சிங்கிடம் அதிகளவில் பணம் இருப்பதை தெரிந்துகொண்ட பாவனா ரெட்டி, அவரிடம் இருந்து நகை- பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் கூலிப்படையை சேர்ந்த புல்லாரெட்டி, சுப்பிரமணி, நாகேஷ் ரெட்டி, சித்தேஷ், சுதீர் ஆகியோர் உதவியை நாடியுள்ளார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் தேவஹள்ளி அருகே நந்திகிரிதம் பகுதியில் உள்ள ெசாகுசு விடுதிக்கு விஜய்சிங்கை பாவனா ரெட்டி மூலம் வரவழைத்து, அங்கு வைத்து அவரை மிரட்டி பணம், நகையை பறிக்கவும் திட்டம் வகுத்துள்ளனர்.

கடத்தி சிறை வைத்து கைவரிசை

அதன்படி பாவனா ரெட்டி, காதலன் விஜய்சிங்கை கடந்த 16-ந்தேதி தேவஹள்ளிக்கு வரவழைத்துள்ளார். ஆனால் அங்கு பாவனா ரெட்டி செல்லவில்லை. அங்கு வந்த விஜய்சிங் காதலியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் அங்கு வந்த கூலிப்படையை சேர்ந்த 5 பேரும் விஜய்சிங்கை கடத்திச் சென்று நந்திகிரிதம் பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து 2 மடிக்கணினிகள், 3 செல்போன்கள், 12 கிராம் தங்க சங்கிலியை பறித்துள்ளனர். மேலும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.21 லட்சத்தையும் ஒரு வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தும் பறித்துள்ளனர். மேலும் அவரை தொடர்ந்து தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு அதாவது 18-ந்தேதி மாலை அவரை விடுவித்துள்ளனர்.

காதலி உள்பட 6 பேருக்கு வலைவீச்சு

இதற்கிடையே காதலி பாவனா ரெட்டிக்கும், கூலிப்படைக்கும் இந்த கடத்தல், கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது விஜய்சிங்கிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் பற்றி அவர் நந்திகிரிதம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் பாவனா ரெட்டி, கூலிப்படையை சேர்ந்த 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 6 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.23 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

என்ஜினீயரை கூலிப்படையை ஏவி கடத்தி நகை-பணத்தை காதலி கொள்ளையடித்த துணிகர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story