தனியாக வேட்பாளர்களை அறிவித்த திரிணாமுல் காங்கிரஸ்: "என்ன அழுத்தம் என்று தெரியவில்லை..." - காங்கிரஸ்


தனியாக வேட்பாளர்களை அறிவித்த திரிணாமுல் காங்கிரஸ்: என்ன அழுத்தம் என்று தெரியவில்லை... - காங்கிரஸ்
x

கோப்புப்படம் 

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சமரசம் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

'இந்தியா' கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார். முன்னதாக காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டது. அதனை மம்தா தரவில்லை. பிரச்சினைக்கு பேசி சுமூக தீர்வு காணப்படும் என காங்கிரஸ் கூறியிருந்தது.

இந்த சூழலில் மேற்கு வங்காளத்தில் மக்களவை தொகுதியில் போட்டியிடும் 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சமரசம் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் மரியாதைக்குரிய தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் கட்சி எதிர்நோக்கியுள்ளது. இதனை மற்ற கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சி பின்பற்றி வருகிறது. இருதரப்பிலும் பேச்சுவார்த்தை, விட்டுக்கொடுத்தல் உள்ளிட்ட சமரசங்கள் தேவைப்படுகிறது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும், எனினும் ஒருதலைபட்சமான அறிவிப்பை திரிணாமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, மராட்டியம், டெல்லியில் செய்ததைப்போல நாம் அதை கூட்டாக இணைந்து செய்ய வேண்டும்.

திரிணாமூல் காங்கிரசுக்கு அவசரமாக வேட்பாளர்களை அறிவிக்கவேண்டிய அழுத்தம் என்ன..? இந்தியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதே காங்கிரசின் நோக்கமாக உள்ளது. மேற்கு வங்காளத்திலும் அதையேதான் காங்கிரஸ் விரும்புகிறது. நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.


Next Story