அரைகுறை உடை அணிந்ததால் மனைவி கழுத்தை அறுத்து கொலை - காதல் கணவர் வெறிச்செயல்


அரைகுறை உடை அணிந்ததால் மனைவி கழுத்தை அறுத்து கொலை - காதல் கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 1 Jan 2024 3:01 AM GMT (Updated: 1 Jan 2024 12:55 PM GMT)

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த அவரது காதல் கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஹாசன்,

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா ராம்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஜீவன் (வயது 25). இவரது மனைவி ஜோதி (22). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அரிசிகெரேயில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும்போது ஜீவன்-ஜோதி இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் ஜோதி, அரைகுறை (மாடர்ன்) உடைகளை அணிந்து வந்ததாக தெரிகிறது. அதாவது உடல் பாகங்கள் தெரியும்படி உடை அணிந்துள்ளார். இது ஜீவனுக்கும், அவரது குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. இதனால், அரைகுறை உடை அணியக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஆனாலும், ஜோதி அதனை கேட்கவில்லை என தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜோதி வெளியே சென்றார். அப்போதும் அவர் எதிர்ப்பை மீறி அரைகுறை உடை அணிந்திருந்ததாக தெரிகிறது. அப்போதும், ஜீவன், ஜோதியை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து ஜீவன், ஜோதியை மோட்டார் சைக்கிளில் கொண்டு விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் ஜீவன், ஜோதியை அங்குள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்று அவரை சரமாரியாக தாக்கி உள்ளார். பின்னர், தான் வைத்திருந்த கத்தியால் ஜோதியின் கழுத்தை அறுத்தார். இதில், ஜோதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஜீவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அரிசிகெரே புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அரைகுறை உடை அணிந்ததால் ஆத்திரத்தில் ஜோதியை, அவரது காதல் கணவர் ஜீவன் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அரிசிகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவனை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story