டெல்லி மெட்ரோவில் கூட்ட நெரிசலில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள்; வைரலாகும் வீடியோ


டெல்லி மெட்ரோவில் கூட்ட நெரிசலில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள்; வைரலாகும் வீடியோ
x

சிந்து குப்தா என்ற யூ-டியூபரால் இந்த சம்பவம் படம் பிடிக்கப்பட்டு, பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் வேலைக்கு செல்வோர், மாணவ மாணவிகள் என மக்கள் அதிக அளவில் ரெயில்களை பயன்படுத்துவது வழக்கம். புறநகர் ரெயில்களில் கூட்டம் வழிந்தோடும். இதனால், கூடுதல் சேவையாக டெல்லியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆனால், காலை மற்றும் மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் மெட்ரோ ரெயில்களிலும் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படும். இந்த சூழலில், டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகளின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பெண்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் யூ-டியூபர் ஒருவரால் படம் பிடிக்கப்பட்டு, பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது. சிந்து குப்தா என்ற அந்த நபர் நெரிசல் மிக்க மெட்ரோ ரெயிலில் பயணிகளுடன் ஒருவராக ஏற முற்படும்போது, அந்த 2 பெண்களும் ஒன்றாக வருகின்றனர். வழியில் பெண் பயணிகளிடம் இருந்து அந்த 2 பெண்கள் சேர்ந்து, பர்சை திருடுகின்றனர். பின்னர் கடைசி தருணத்தில், ரெயிலில் ஏறாமல் திரும்பி செல்கின்றனர்.

இதனை கவனித்த குப்தா, உடனடியாக கூச்சல் போட்டு, 2 பெண் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட பெண்களை அடையாளம் காட்டுகிறார். ரெயிலை விட்டு இறங்கி, அவர்களை பிடிக்கும்படியும் சத்தம் போடுகிறார். இதனால், பர்சை திருடிய 2 பெண்களும் தப்பியோட முயற்சிக்கின்றனர். மற்றவர்களின் உதவியுடன் பெண் பயணிகள், அவர்களை துரத்தி பிடித்து, அடித்தனர்.

இதில், பெண் பயணி ஒருவர், கீழே கிடந்த தன்னுடைய பர்சை எடுக்கிறார். திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களையும் மற்ற பயணிகள் அடித்து, உதைத்தனர். இந்த வீடியோ இன்று காலை பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பலரும் வீடியோ எடுத்து, வெளியிட்டு விட்டு நின்று விடுவதுபோல் இல்லாமல், திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து கொடுத்ததற்காக குப்தாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story