செங்கல்பட்டு கால் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது


செங்கல்பட்டு கால் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது
x

கொலையுண்ட அர்ஜுன் மற்றும் கொலை வழக்கில் கைதான லோகநாதன், பெரியசாமி

செங்கல்பட்டு அருகே மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட கால் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் மேலும் இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அடுத்த அரசன்கழனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 30). பா.ம.க பிரமுகரான இவர் தனியார் கால் டாக்ஸியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி தாம்பரம் அடுத்த மெப்ஸ் பகுதியிலிருந்து செங்கல்பட்டு வரை தனியார் கால் டாக்ஸி நிறுவனம் மூலம் இவரது கார் புக்கிங் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு வந்த கார் டிரைவர் அர்ஜுனன் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு செங்கல்பட்டு அடுத்த வல்லம் பஸ் நிலையம் அருகே சடலமாக கிடந்தார். தொடர்ந்து உடலை கைப்பற்றிய செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.

இதற்கிடையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியினரும், தனியார் கார் ஓட்டுனர் நலச்சங்கத்தினரும் போராட்டத்தில் களம் இறங்கினர்.

இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து கார் நிறுவனத்தில் புக்கிங் செய்த செல்போன் எண்ணை வைத்து பெரம்பலூர் மாவட்டம் கரியனூர் பகுதியைச் சேர்ந்த பிரசாத் (26), திருமூர்த்தி (22), கட்டிமுத்து (25) ஆகிய மூவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பிடிப்பட்ட குற்றவாளிகள் காரை கடத்தி ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக போலிசில் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய லோகநாதன் (22) மற்றும் பெரியசாமி என்கின்ற பிரசாந்த் (18) ஆகிய இரண்டு நபர்களை காவல் துறையினர் இன்று கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story