அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து - திண்டுக்கல்லில் பரபரப்பு


அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து - திண்டுக்கல்லில் பரபரப்பு
x

அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேலம்பட்டியை சேர்ந்தவர் ஆசை (வயது 53). விவசாயி. அ.தி.மு.க. பிரமுகரான இவர், திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவராகவும் உள்ளார். நத்தம் மூங்கில்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி (53). விவசாயி. ஆசையும், ஆண்டிச்சாமியும் உறவினர்கள். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும், நத்தம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் 3 பேர் பஸ் நிலையத்துக்கு வந்தனர். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த கத்தியால் ஆசையையும், ஆண்டிச்சாமியையும் சரமாரியாக குத்தினர். இதில் நிலைகுலைந்து போன 2 பேரும் கீழே சாய்ந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் 3 பேரும், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். கத்தியால் குத்தப்பட்டதில் ஆசை, ஆண்டிச்சாமி ஆகியோருக்கு முகம், கை, நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டது.ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக 2 பேரும் கத்தியால் குத்தப்பட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே முகமூடி அணிந்து வந்த 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்று தெரியவில்லை. இதுதொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story