ஶ்ரீபெரும்புதூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது
ஶ்ரீபெரும்புதூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்
காஞ்சீபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் கிராமம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 41). இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும், டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். நாகராஜ் சகநண்பர்களுடன் மதுஅருந்த சென்றபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுனில் தலைமையில் 4 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே நாகராஜூடன் மதுஅருந்த சென்ற நண்பர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் வந்து கத்தியால் நாகராஜின் கழுத்து, வயிற்று பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்து.
இந்த நிலையில் நேற்று திருவாலங்காடு பகுதியில் பதுங்கி இருந்த ஸ்ரீபெரும்புதூர் கிளாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (29), விஜய் (27), சூரக்காபுரம் ரெட் என்கிற கார்த்தி (27), ஸ்ரீபெரும்புதூர் தாந்தோணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பல்லு மணிகண்டன் (25) ஆகிய 4 பேரை சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் தப்பி ஓடி முயன்றனர். அதில் அவர்கள் 4 பேரும் கீழே விழுந்து கை, கால்கள் முறிந்தது. உடனே கொலை குற்றவாளிகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மாவு கட்டு போட்டு பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் கடந்த ஜனவரி மாதம் கிளாய் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்கு பிறகு ஆடுகள் வெட்டி கறி விருந்து நடைபெற்றது. விருந்து நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜிக்கும், செல்வகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் பலமுறை நாகராஜை தீர்த்துக்கட்ட முயற்சித்தும் தோல்வியுற்றதாகவும், நாகராஜ் தோப்பு பகுதியில் மதுஅருந்தி கொண்டிருப்பதை அறிந்த செல்வக்குமார் தனது கூட்டாளிகள் விஜய், சூரக்காபுரம் ரெட் என்கிற கார்த்தி மற்றும் பல்லு மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து நாகராஜை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக ஒப்புக்கொண்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.