பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வை முடக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி


பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வை முடக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி
x

பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வை முடக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

மின்கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வை கண்டித்தும், கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியும் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவை சிவானந்தா காலனியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

திட்டங்களை முடக்குகிறது

அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை முடக்கும் வகையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. செயல்படாத தி.மு.க. அரசை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து எழுப்பவே இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் தமிழக மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? அதனால் மக்கள் பெற்ற பலன்கள் ஏதாவது உண்டா என்று கேட்டால் ஒன்றுமே கிடையாது.

அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு போடுகின்றனர். அப்படி வழக்கு போட்டால் அ.தி.மு.க. முடங்கி விடுமா?. ஓராயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் அ.தி.மு.க.வை முடக்க முடியாது.

ரூ.1,000 உரிமைத்தொகை

தி.மு.க ஆட்சிக்கு வந்தததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து கையெழுத்துதான் என்றனர். அது என்னவானது?

மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை அறிவித்து 1½ ஆண்டு ஆகியும் இதுவரை கொடுக்கவில்லை. கேட்டால் ஆய்வு செய்து வருவதாக கூறுகின்றனர். எல்லாம் ஏமாற்று வேலை. முதியோர்களுக்கு மாதம் ரூ.1.000 கொடுத்து வந்தோம். அதை இப்போது நிறுத்தி உள்ளனர். சுமார் 7 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்காமல் நிறுத்திவைத்துள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது.

மக்கள் வயிறு எரிகிறது

100 நாள் திட்ட பணிகளை முடக்கி மக்களுக்கு எதிராக தி.மு.க. அரசு நடந்து கொண்டிருக்கிறது.

10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மிளிர்ந்து வீறுநடை போட்டது. தி.மு.க. ஆட்சி அமையும்போது எல்லாம் சட்டம்-ஒழுங்கு கெட்டு விடும். அது இப்போதும் தொடர்கிறது. இதுகுறித்து கேட்டால் ஸ்டாலின், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே பழிசுமத்துகின்றனர். வயிறு எரிகிறது என்கிறார். எங்களது வயிறு எரியவில்லை. இந்த ஆட்சியால் மக்களின் வயிறு எரிகிறது.

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?

அ.தி.மு.க ஆட்சியில் நல்ல திட்டங்கள் மற்றும் மக்கள் பெற்ற பலன் குறித்து நான் பட்டியலிட்டு நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன். நீங்கள் செய்த திட்டங்கள் மக்கள் பெற்ற பலன்கள் குறித்து என்னுடன் நேருக்கு நேராக விவாதிக்க தயாரா?

பொங்கல் பரிசு தருவதற்கு முதல்-அமைச்சர் தடுமாறி வருகிறார். கடந்த பொங்கலுக்கு கொடுத்த வெல்லம் தரமற்றதாக இருந்தது. இது மக்களுக்கு தெரியும். பொங்கல் தொகுப்பில் இருந்த அரிசியில் பூச்சி, பல்லி இருந்தது. தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்து உள்ளது. சுமார் ரூ.500 கோடிக்கு மேல் ஊழல் நடந்து உள்ளது. இவ்வாறு ஏழை-எளிய மக்களுக்கு வழங்க கூடிய பொருட்களில் கூட ஊழல் செய்து வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் போராட்டம்

சொத்துவரி, மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி அவதிக்கு உள்ளாக்கி விட்டனர். மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். அல்லது கைவிட வேண்டும். எனவே மின்கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இந்த போராட்டத்துக்கு வந்த அ.தி.மு.க.வினரின் வாகனங்களை காவல்துறையினர் தூக்கிச்சென்றுள்ளனர்.

40 தொகுதிகளிலும் வெற்றி

அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு சென்ற ஒருவர் கொடுக்கும் ஆலோசனையை காவல்துறையினர் கேட்கக்கூடாது. வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அங்கு போய் விடுவார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story