"ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம்"அண்ணாமலை குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம்
''ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம்'' கோவை கோவிலுக்கு அண்ணாமலை சென்றது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம் செய்து உள்ளார்.
கோவை,
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண் 62-ல் பகுதி சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டார்.
பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தயவுசெய்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும். அதாவது, உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி எது என்ற காமெடியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதாவது ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தவர்களை, உலகத்தில் நீங்கள் இங்குதான் பார்த்திருப்பீர்கள்.
அந்தக் கோவில் கோட்டை ஈஸ்வரன் கோவில், அங்கு அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்ததாக செய்திகள் வந்தன, தொலைக்காட்சியிலும் காண்பித்தார்கள். இதைவிட கோமாளித்தனம் வேறு எதுவும் இருக்காது. எனவே, அதுபோன்ற கருத்துகளைக் கூறும் அண்ணாமலை குறித்த கேள்விகளை தவிர்த்திட வேண்டும்.
நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைப் பார்த்து நீங்கள் வேண்டுமென்றால், என்னுடைய செய்தியாளர் சந்திப்பை புறக்கணியுங்கள், தவிர்த்துவிடுங்கள் என்று கூறுகிறார். அதன்பிறகும், அவர் குறித்த கேள்விகளை முன்வைக்கிறீர்களே? எனவே அவர் குறித்த கேள்விகளை விட்டுவிடுங்கள், நாட்டு மக்களுக்கான கேள்விகள் இருந்தால் கேளுங்கள்" என்று கூறினார்.