செங்கல்பட்டில் பா.ம.க. நிர்வாகிகள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் - அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது


செங்கல்பட்டில் பா.ம.க. நிர்வாகிகள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் - அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது
x

செங்கல்பட்டில் பா.ம.க. நிர்வாகிகள் கொலையை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் காட்டூர் காளிதாஸ், பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம்- தர்காஸ் மனோகர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. சார்பில் பழைய பஸ்நிலையம் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் திலகவதி பாமா, மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை, அருள் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தமிழக அரசுக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று கூறி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் பா.ம.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

இந்த கொலை சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணம் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்தான். போலீசில் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். உங்களால் முடியவில்லை என்று சொன்னால் எங்கள் தம்பிகள் பார்த்து கொள்வார்கள். ஆனால் நாங்கள் செய்ய மாட்டோம். நம்மை குறி வைத்து கொண்டிருக்கிறார்கள் என்ற கோபம் பா.ம.க.வினர் மத்தியில் உள்ளது. அந்த கோபம் வெடிப்பதற்கு முன்னால் நடவடிக்கை எடுங்கள். நான் சொன்னாலும் என் தம்பிகள் அதன் பிறகு கேட்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி கமலம்மாள், என்.எஸ். ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி, மதுவிலக்கு துறை அமைச்சரா? அல்லது மது விற்பனை துறை அமைச்சரா என கேள்வி எழுப்பினார்.

அதன் பின்னர் நிருபர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது:-

பா.ம.க. நிர்வாகிகள் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் கூலிப்படை கலாசாரம் திடீரென வந்ததில்லை, கடந்த 10 ஆண்டுகளாக பெருகி இப்போது உச்சத்தில் உள்ளது.

கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உத்தரபிரதேசத்தில் நடைபெற்று கொண்டிருக்கிற கூலிப்படை கலாசாரம் ஒழிப்பு போன்று தமிழ்நாட்டிலும், இந்த கூலிப்படையை வேரோடு் ஒழிக்க வேண்டும். கோர்ட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், கூட வெடிகுண்டு வீசுகிறார்கள். நேற்று கூட சென்னையில் பா.ம.க. நிர்வாகி ஒருவர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் நெமிலி ஆளவந்தார் அறக்கட்டளை சார்ந்த நிலங்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை, இந்த நிலங்களை தனியார் குத்தகைக்கு விடுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த ஆளவந்தார் அறக்கட்டளை நிலம் முழுவதும் வன்னியர்களுக்கு உரிமையான சொத்து, 1,330 ஏக்கர் நிலம் வன்னியர்களுக்கு சொந்தமானது. அவர்களுக்காக பயன்படுத்த என அவர் உயிலில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலங்களை பிரித்து குத்தகைக்கு விட அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பா.ம.க.வுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் கலந்து கொள்வது குறித்து கட்சி ஆலோசனை செய்து முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு அன்புமணி ராமதாஸ் கொலை செய்யப்பட்ட நாகராஜ் வீட்டுக்கு சென்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


Next Story