சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷம்- தஞ்சாவூா் பேராசிரியர் கைது
சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷம் செய்த தஞ்சாவூா் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடந்த 18-ந் தேதி அன்று சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் 239 பயணிகள் பயணம் செய்தனர். அதில் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் சவுதி அரேபியா வழியாக சென்னை வந்தார். அப்போது அவருடைய இருக்கைக்கு பின்னால், அமர்ந்திருந்த மருத்துவ பேராசிரியராக பணியாற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீராம் (வயது45) என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானம் சென்னையில் தரை இறங்கியதும் பெண் என்ஜினீயர் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் ஸ்ரீராமிடம் போலீசார் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக பெண் என்ஜினீயர் சமூக வலைதளங்களில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விமான நிலைய போலீசார் பேராசிரியர் ஸ்ரீராம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.