தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கு - 5 பேர் சரண்


தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கு - 5 பேர் சரண்
x

சரணடைந்த 5 பேரில் ஒருவர் மைனர் என தகவல் வெளியாகியுள்ளது.

சத்தியமங்கலம்,

சென்னையை அடுத்து உள்ள வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஆராமுதன். 54 வயதான இவர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தி.மு.க. கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வந்த ஆராமுதன் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும், ஊராட்சி ஒன்றிய துணை தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

நேற்று இரவு 8 மணி அளவில் வண்டலூர் பழைய பாலத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வழியில் தனது காரை நிறுத்திவிட்டு அவருடன் வந்திருந்த 2 பேருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மர்ம கும்பல் ஒன்று மின்னல் வேகத்தில் காரில் வந்து ஆராமுதனின் கார் மீது வெடிகுண்டுகளை வீசியும், சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்தனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில் தி.மு.க. நிர்வாகி ஆராமுதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் சரணடைந்துள்ளனர். கொலையாளிகள் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சத்தியசீலன், அகஸ்டின், முனீஸ் உள்ளிட்டோர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் சரணடைந்த 5 பேரில் ஒருவர் மைனர் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story