சனாதன சங்பரிவார்களின் 'சமூகப் பிரிவினைவாதப்' போக்குகளை முறியடிக்க வேண்டிய கடமை திமுக தலைவருக்கு உள்ளது - திருமாவளவன்


சனாதன சங்பரிவார்களின் சமூகப் பிரிவினைவாதப் போக்குகளை முறியடிக்க வேண்டிய கடமை திமுக தலைவருக்கு உள்ளது - திருமாவளவன்
x

சனாதன சங்பரிவார்களின் 'சமூகப் பிரிவினைவாதப்' போக்குகளை முறியடிக்க வேண்டிய கடமை திமுக தலைவருக்கு உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக தலைமை பொறுப்பை ஏற்கிற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய அளவில் 'சமூகப் பொறுப்பு' உருவாகியுள்ளது. குறிப்பாக, சனாதன சங்பரிவார்களின் 'சமூகப் பிரிவினைவாதப்' போக்குகளை முறியடிக்க வேண்டிய கடமை உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

15-வது திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அமைந்தகரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்திய நாட்டுக்கே கருத்தியல் அடிப்படையிலான பேரிடர் சூழ்ந்துள்ள நிலையில், திமுக தலைமை பொறுப்பை ஏற்கிற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர்களுக்கு தேசிய அளவில் 'சமூகப் பொறுப்பு' உருவாகியுள்ளது. குறிப்பாக, சனாதன சங்பரிவார்களின் 'சமூகப் பிரிவினைவாதப்' போக்குகளை முறியடிக்க வேண்டிய கடமை உள்ளது. அதாவது இந்திய அளவில் சனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

எனவே தேசிய அளவில் செயல்திட்டங்களை வரையறுத்து இயங்கிட வேண்டுமெனவும் அரசமைப்புச்சட்டம் மற்றும் சனநாயகத்தைப் பாதுகாத்திட அவர் முன்வர வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் துணை பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள கனிமொழி எம்பிக்கு வாழ்த்து தெரிவித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகப் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.


Next Story