செப்டம்பர் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் சுப்ரீம் கோர்ட்டை அணுகி காவிரியில் கூடுதல் தண்ணீரை பெற வேண்டும் - டாக்டர் ராமதாஸ்


செப்டம்பர் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் சுப்ரீம் கோர்ட்டை அணுகி காவிரியில் கூடுதல் தண்ணீரை பெற வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 29 Aug 2023 10:00 PM GMT (Updated: 29 Aug 2023 10:00 PM GMT)

செப்டம்பர் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் சுப்ரீம் கோர்ட்டை அணுகி காவிரியில் கூடுதல் தண்ணீரை பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காப்பாற்ற வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிடப்பட்டு இருக்கிறது. காவிரி படுகையின் தண்ணீர் தேவைக்கு இது போதாது என்பது ஒருபுறமிருக்க, இந்த அளவு குறைவான நீரைக் கூட தமிழகத்திற்கு தர முடியாது என்று கர்நாடகம் மறுத்து விட்டது. கர்நாடகத்தின் பிடிவாதமும், காவிரி ஒழுங்குமுறை குழு காட்டும் பாகுபாடும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.

எனவே டெல்லியில் நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், குறுவைப் பயிர்களைக் காப்பாற்றுவதற்காக வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் பிரதிநிதிகள், காணொலி மூலமாக அல்லாமல் நேரில் சென்று வலியுறுத்த வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றால், குறுவை பயிர்களை காக்க வேண்டியதன் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, காவிரி வழக்கு செப்டம்பர் 1-ந் தேதி விசாரணைக்கு வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க ஆணையிடும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story