வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு:எதிர்வீட்டு இளம்பெண் சிக்கினார்


தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 4:21 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் பட்டப்பகலில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற எதிர்வீட்டு இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

மூதாட்டி

ஆறுமுகநேரி ரெயில்வே நிலையம் அருகில் உள்ள மேல சண்முகபுரத்தில் வசித்து வருபவர் சாமிநாடார் மனைவி தங்கக்கனி(வயது 70). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். ஒரு மகன் கார்மேகராஜ் உத்திரபிரதேசத்திலுள்ள ராணுவத்தில் பணியாற்றுகிறார் இவர் பெயர் கார்மேகராஜ், மற்றொரு மகன் கண்ணன் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்த நிலையில் ராணுவத்தில் உள்ள கார்மேகராஜ் மனைவி ஷர்மிளா மற்றும் 3 பேரக்குழந்தைகளுடன் தங்ககனி ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். நேற்று காலையில் சர்மிளா பணியாற்றிவரும் தனியார் பள்ளிக்கு சென்று விட்டார். 2 பேரக்குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில், 3½ வயதுடைய பேத்தி பிரனிஷாவுடன் தங்கக்கனி வீட்டில் உள்ள கட்டிலில் படுத்திருந்துள்ளார்.

எதிர்வீட்டு இளம்பெண் புகுந்தார்

அப்போது எதிர்வீட்டில் வசிக்கும் கண்ணன் மனைவி இன்பராணி(32) வீட்டிற்குள் புகுந்துள்ளார். அவர் திடீரென்று கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை தங்கக்கனியின் முகத்தில் தூவி உள்ளார். இதில் கண்ணை திறக்க முடியாமல் தங்கக்கனி அவதிப்பட்டதை பயன்படுத்தி கொண்டு, அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலிைய இன்பராணி பறித்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடியுள்ளார். ஆனாலும், சுதாரித்து கொண்ட தங்கக்கனி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். இதை பார்த்த இன்பராணி மற்றொரு வீட்டில் புகுந்து கொண்டு கதவை பூட்டி கொண்டாராம்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிக்கினார்

இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். ஒரு வீட்டில் மறைந்து இருந்த இன்ப ராணியை பிடித்து, அவர் மூதாட்டியிடம் பறித்து சென்ற நகையை மீட்டனர்.

இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்பராணியை கைது ெசய்தனர். ஆறமுகநேரியில் எதிர் வீட்டு இளம்பெண்ணே, மூதாட்டி முகத்தில் மிளகாய்பொடியை தூவி விட்டு நகைைய பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story