தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு - அண்ணாமலை கண்டனம்


தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு - அண்ணாமலை கண்டனம்
x
தினத்தந்தி 23 April 2024 11:35 AM GMT (Updated: 23 April 2024 12:27 PM GMT)

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருட்களின் புழக்கம் சகஜமாகி விட்டதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

மதுரையில் சித்திரை திருவிழாவிற்கு செல்லும் போது கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள், பைக்கில் சென்றவரை மடக்கி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழாவிற்காக, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மதுரை மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மோதலில் சுமார் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் கான் முகமது ஓட்டுனராக உள்ளவர், நேற்று இரவு இருசக்கர வாகனம் மூலம் வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த வாலிபர்கள் சிலர் கஞ்சா போதையில் இவரை அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர்.

படுகாயமடைந்த கான் முகமது தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமில்லாமல் அந்த பகுதியில் உள்ள இரண்டு கடைகளையும் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்த போலீசார் கஞ்சா போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருட்களின் புழக்கம் சகஜமாகி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருட்களின் புழக்கம் சகஜமாகி விட்டதன் விளைவு தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில தினங்களில் கஞ்சா போதையால் நடக்கும் 4வது குற்ற சம்பவம் இது என்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எப்போது விழிப்பாரோ..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story