அதிமுக பாஜகவை கழற்றி விடுகிறதா? பாஜக அதிமுகவை கழற்றி விடுகிறதா? - அமைச்சர் மனோ தங்கராஜ்


அதிமுக பாஜகவை கழற்றி விடுகிறதா? பாஜக அதிமுகவை கழற்றி விடுகிறதா? - அமைச்சர் மனோ தங்கராஜ்
x

நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி வரப்போகிறது என்று அதிமுக எம்.பி. சிவி சண்முகம் பரபரப்பான கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.க்கு எதிராக அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்.பி. சிவி சண்முகம், நாடாளுமன்ற தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி வரப்போகிறது என்றார். விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கழற்றி விடப்போகிறது. திமுகவிடம் ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள் அல்லது காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் கழற்றி விடுங்கள் என்று பாஜக கூறுகிறது' என்றார்.

அதிமுக எம்.பி. சி.வி. சண்முகத்தின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த கட்சி, எந்த கட்சியோடு கூட்டணி வைக்கும் என்று அந்தந்த கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பேசினார்கள் என்றால் அதில் ஒரு தன்மை இருக்கிறது. இப்போது யாரோ ஒரு 3-ம் கட்ட தலைவர்கள் இல்லை அது கூட்டணி வைக்கிறார்கள் என்றால் அவர்கள் பாஜகவில் சேர்ந்திருக்க வேண்டும்... அல்லது திமுகவில் சேர்ந்திருக்க வேண்டும்... அப்படி இருந்தால் நான் பதில் சொல்கிறேன். யூகங்களுக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்' என்றார்.

இதனை தொடர்ந்து நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் இன்னும் ஓராண்டில் நெருங்க நிலையில் காங்கிரசை கழற்றி விட்டுவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக துடியாக துடிக்கிறது. உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று உறவு வைத்துக்கொள்வதில் திமுக போன்று ஒரு சந்தர்ப்பவாத பச்சோந்தி அரசியல் வேறு எந்த கட்சியும் செய்யாது' என்றார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி வரப்போவதாக அதிமுக எம்.பி. சிவி சண்முகம் கூறிய கருத்துக்கு திமுக எம்.எல்.ஏ.வும் தகவல் தொழில்நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், மயக்கத்தில் இருக்கக்கூடிய ஆட்கள் ஏதாவது உளறுவதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது.

இன்றைக்கு அதிமுக பாஜகவை கழற்றி விடுகிறதா? பாஜக அதிமுகவை கழற்றி விடுகிறதா? என்பது அவர்கள் கதை. எங்கள் தலைவர் (திமுக தலைவர் முக ஸ்டாலின்) ஒட்டும் இல்லை உறவும் இல்லை (பாஜகவுடன்) என்று கூறியுள்ளார். இது குறித்து நாம் மேலும் பேசவேண்டிய அவசியம் இல்லை' என்றார்.




Next Story