சென்னை வந்தார் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா


சென்னை வந்தார் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
x
தினத்தந்தி 11 Feb 2024 12:35 PM GMT (Updated: 11 Feb 2024 12:49 PM GMT)

சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானிதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இந்த நிலையில், யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடைசி நாளான இன்று சென்னையில் யாத்திரையை முடிக்க தமிழக பா.ஜனதா திட்டமிட்டிருந்தது. இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் சென்னையில் யாத்திரைக்கு போலீஸ் துறை அனுமதி மறுத்தது. அதே நேரத்தில், சென்னை சென்டிரல் அருகே மின்ட் தங்க சாலையில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடத்த மட்டும் போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் சென்னை பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை அடுத்த காட்டாங்குளத்தூர் அருகே தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், இணை பொறுப்பாளர்களுடன் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் 'என் மண் என் மக்கள்' யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தங்க சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மட்டும் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவருக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானிதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு ஜே.பி.நட்டா செல்ல உள்ளார். இரவு 7 மணிக்கு தங்கசாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் ஜே.பி.நட்டா உரையாற்றுகிறார்.


Next Story