நாடாளுமன்ற தேர்தல்: தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் மீண்டும் கனிமொழி போட்டி


தினத்தந்தி 10 March 2024 6:27 AM GMT (Updated: 11 March 2024 10:41 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு அனைத்தும் முடிந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகள், ம.தி.மு.க. 1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதி, கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்களுக்கு நேர்காணல் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தூத்துக்குடி எம்.பி.யும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி விருப்பமனு அளித்திருந்தார்.

இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த கனிமொழி பங்கேற்றார். அவரிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதித்தனர்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தி.மு.க. சார்பில் கனிமொழியை தவிர வேறுயாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.


Next Story