அ.தி.மு.க.வை யாராலும் பிளவுபடுத்த முடியாது - எடப்பாடி பழனிசாமி


அ.தி.மு.க.வை யாராலும் பிளவுபடுத்த முடியாது - எடப்பாடி பழனிசாமி
x

‘அ.தி.மு.கவை. யாராலும் பிளவுபடுத்த முடியாது’ என்று ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமண விழாவில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் என்.பி. நடராஜ் இல்ல திருமண விழா ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. விழாவில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். காலத்தில், திண்டுக்கல் மாவட்டம் அ.தி.மு.க. கோட்டையாக விளங்கியது. அதன் பிறகு ஜெயலலிதாவின் காலத்தில் திண்டுக்கல் மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக உருவெடுத்தது. அந்த இருபெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. தமிழகத்தில் வலிமையான இயக்கமாக வளர்ந்து இருக்கிறது.

பிளவுபடுத்த முடியாது

எத்தனையோ சோதனைகளை தாண்டி நாம் ஆட்சி செய்தோம். இது உங்கள் அனைவருக்கும் தெரியும். நான் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இப்போது வரை போராடி கொண்டு தான் இருக்கிறேன்.

ஆளும் கட்சியாக இருக்கும் போதும் போராட்டம் தான், எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் போராட்டம் தான். போராட்டம், போராட்டம் என்று அத்தனையையும் தாண்டி வெற்றியை பெற்று இருக்கிறோம்.

உங்களுடைய ஆதரவால் அ.தி.மு.க வலிமையோடும், பொலிவோடும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வை பலர் பிளவுபடுத்த நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. அ.தி.மு.க.வை யாராலும் பிளவுபடுத்த முடியாது. ஏனெனில் இது மக்கள் சக்தி இயக்கம். எம்.ஜி.ஆர். மக்களுக்காக அ.தி.மு.க.வை உருவாக்கினார். அதை ஜெயலலிதா கட்டிக் காத்தார்.

அந்த இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசுகள் கிடையாது. மக்களே வாரிசாக இருந்தனர். அந்த இரு தலைவர்களும் நாட்டுக்காக இறைவன் கொடுத்த கொடை. அவர்களின் வழியில் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

சர்வாதிகார ஆட்சி

அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினோம். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்றினோம்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது மக்களாட்சி நடைபெற்றது. இப்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் விற்பனை என தினந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு திறமையற்ற முதல்-அமைச்சர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அதற்கு விரைவில் மக்கள் நல்ல பதிலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.‌

இவ்வாறு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.


Next Story