காவிரியிலிருந்து தமிழகத்துக்கு நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு


காவிரியிலிருந்து தமிழகத்துக்கு நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 3 Nov 2023 1:09 PM GMT (Updated: 3 Nov 2023 2:23 PM GMT)

காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரியில் நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 30-ந்தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 89-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் அந்தந்த மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள், வருகிற 15-ம் தேதி வரை வினாடிக்கு 2,600 கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட வேண்டும் என முடிவு செய்து அதனை கர்நாடக அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் பரிந்துரைத்தனர்.

ஆனால், எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை எனக்கூறி இந்த பரிந்துரையை கர்நாடகா தரப்பு மறுத்தது. இந்த நிலையில், இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இன்று தமிழகத்தின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் கர்நாடகா, புதுச்சேரி, கேரளா அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு நிலுவையில் இருக்கும் 11 டி.எம்.சி நீரை வரும் 23ம் தேதி வரை வினாடிக்கு 2600 கன அடி வீதம் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story