தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை- அண்ணாமலை


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை-  அண்ணாமலை
x

டிசம்பர் 31-ந் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை பாதயாத்திரை நடத்தப்படும் என்று பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணாமலை பேசினார்.

உண்ணாவிரத போராட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டிப்பதாக கூறி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் ராதாரவி, மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், வினோஜ் பி.செல்வம், துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கரு.நாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத பந்தலில் அமர்ந்திருந்த பெண்கள் அரசை கண்டித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும் அமர்ந்திருந்தனர்.

தமிழக அரசு தயாரா?

உண்ணாவிரத போராட்டத்தின் போது அண்ணாமலை பேசியதாவது:-

தி.மு.க.வினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 92 பிரிவுகளில் 505 வாக்குறுதிகளை அச்சடித்து வெளியிட்டார்கள். தி.மு.க. ஆட்சி அமைந்து 15 மாதங்கள் ஆன பிறகும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்பட்டு வருவதால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சொத்துவரி உயர்த்தப்படாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதற்கு நேர் எதிராக 150 சதவீதத்திற்கும் மேல் சொத்து வரியை உயர்த்தி உள்ளார்.

தமிழக அரசு ஒரே ஒருமுறை பெட்ரோல் விலை ரூ.3 குறைத்துவிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலம் நமக்கு பாடம் எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளது. தமிழக அரசு தயாராக உள்ளதா?

தமிழகத்திலும் ஏக்நாத் ஷிண்டே

2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறி, 15 மாதங்களில் எந்த வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை. கடந்த ஜூன் 14-ந் தேதியில் இருந்து 2023 டிசம்பர் 31-ந் தேதிக்குள் மத்திய அரசு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை போர்க்கால அடிப்படையில் உருவாக்கி கொடுக்க உள்ளது.

மராட்டியத்தில், உத்தவ் தாக்கரேவை எதிர்த்து 12 பேருடன் ஏக்நாத் ஷிண்டே வெளியே வந்தார். தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருக்கிறார். ஆளும் கட்சியாக இருந்த சிவசேனா தற்போது 13 எம்.எல்.ஏ.க்களை கொண்டதாக மாறியுள்ளது. மராட்டியத்தில் 2½ ஆண்டுகளில் நடந்தது தமிழகத்தில் எப்போது நடக்கும் என்று பார்ப்போம்.

இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான காலம் தமிழகத்துக்கு வரும். இங்கேயும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்.

365 நாட்கள் பாதயாத்திரை

தமிழகத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 25 எம்.பி.க்கள் வந்தால் தான் 150 எம்.எல்.ஏ.க்களுடன் வருகிற 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். இதற்கு மேலும் நாம் பொறுமையாக இருக்க போவது கிடையாது. வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் 505 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாவிட்டால், தமிழகத்தில் உள்ள பாதி டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் பா.ஜ.க.வின் பாதயாத்திரையை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து தொடங்கும். இந்த பாதயாத்திரை 365 நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், 70 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் சென்று இறுதியில் கோபாலபுரத்தில் முடித்து வைக்கப்படும். இந்த பாதயாத்திரையின் போது, தி.மு.க.வின் சோதனைகளையும், பா.ஜ.க.வின் சாதனைகளையும் மக்கள் மத்தியில் பா.ஜ.க. தொண்டர்கள் எடுத்துக் கூறுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

உண்ணாவிரதத்தின் முடிவில் துணைத் தலைவர் சக்கரவர்த்தி, அண்ணாமலைக்கு இளநீர் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


Next Story