விநாயகர் சிலைகள் ஊர்வலம்; மேளதாளத்துடன் ஆறு, ஏரிகளில் கரைப்பு


விநாயகர் சிலைகள் ஊர்வலம்; மேளதாளத்துடன் ஆறு, ஏரிகளில் கரைப்பு
x

திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, பேரம்பாக்கம் பகுதிகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட ஆறு ஏரிகளில் கரைத்தனர்.

திருவள்ளூர்

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது கோவில்கள், வீடுகளில் பொதுமக்கள் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

தற்போது விநாயகர் சதுர்த்தி முடிவடைந்ததையொட்டி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர். நகர், கடம்பத்தூர், மப்பேடு, கீழச்சேரி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை டிராக்டர்களில் வைத்து மேளதாளம் முழங்க அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்று கூடி ஆடிப்பாடி ஊர்வலமாக கொண்டு சென்று கூவம் ஆறு மற்றும் அருகில் உள்ள ஏரிகளில் கரைத்தனர்.

இதைபோல திருவள்ளூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டது.

திருத்தணியில் 267 விநாயகர் சிலைகளை பொதுமக்கள் டிராக்டர்களில் எடுத்து சென்று அரசு அனுமதிக்கப்பட்ட ஏரி, ஆறு மற்றும் குளங்களில் கரைத்தனர்.

இதைபோல பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, ஆர்.கே. பேட்டை போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.


Next Story