அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் சந்திக்க தயார் - ஜெயக்குமார்
அ.தி.மு.க.வினரின் சொத்துபட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.
அண்ணாமலைக்கு சவால்
சென்னை திருவொற்றியூர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்தான் அ.தி.மு.க., தி.மு.க.வினர் பற்றிய சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை உடனடியாக அதை சி.பி.ஐ.க்கு அனுப்பி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அண்ணாமலை செய்வாரா? என்பதுதான் கேள்வி.
மேலும் அண்ணாமலைக்கு நான் சவால் விடுக்கிறேன். நாளைக்கே அ.தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை வெளியிடுவோம் என்று அவர் சொல்லட்டும். அதற்கு அப்புறம் எங்களுடைய பதில் எப்படி இருக்கும் என்பது தெரியும்.
சந்திக்க தயார்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், கட்சியினர் பற்றிய எந்த பட்டியலை அண்ணாமலை வெளியிட்டாலும் நாங்கள் சட்டப்படி இருப்பதால் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். எனவே அண்ணாமலைக்கு நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் யாருக்கும் பயப்படுபவர்கள் கிடையாது. மடியில் கனம் இருப்பவர்களுக்குதான் வழியில் பயம் இருக்கும். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயம் இல்லை.
பா.ஜ.க. அல்லது யாராக இருந்தாலும் பூச்சாண்டி காட்டினால் பயப்பட மாட்டோம். மிரட்டல்கள் விடுக்கிற பாட்ஷாவெல்லாம் எங்களிடம் பலிக்கவே பலிக்காது. எந்த கட்சி வந்தாலும் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி இருக்கும். நாங்கள் கொடுக்கிற சீட்டைதான் அந்த கட்சிகள் வாங்கி செல்ல வேண்டும். அதற்கு பின்னர் 'கப்சீப்'தான்.
இவ்வாறு அவர் கூறினார்.