'விசாரித்ததற்காக 2 போலீசாரை சஸ்பெண்ட் செய்வதா?' - தமிழக காவல்துறைக்கு அண்ணாமலை கேள்வி


விசாரித்ததற்காக 2 போலீசாரை சஸ்பெண்ட் செய்வதா? - தமிழக காவல்துறைக்கு அண்ணாமலை கேள்வி
x

காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிராவிட்டால், தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக திகழும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

நாகப்பட்டினத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை தஞ்சை சரக மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் திரும்பப் பெற வேண்டும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி சாதனைகளை, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் வண்ணம், தமிழக பா.ஜ.க. சார்பில் என் மண் என் மக்கள் நடைபயணம் நடைபெறுகிறது. இந்த நடைபயணத்தில், பா.ஜ.க. சகோதர சகோதரிகள் மட்டுமல்லாது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை விரும்பும் சாதாரண பொதுமக்களும், மாற்றுக் கட்சியினரும் கூட பெரும் திரளாகக் கலந்து கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் மக்களின் பேராதரவும், பாரதப் பிரதமர் மீது மக்கள் கொண்டுள்ள பேரன்பும் வெளிப்படுவது, ஊழல்வாதிகளுக்கும், குடும்ப அரசியல் நடத்தும் குறுநில மன்னர்களுக்கும் நடுக்கத்தைக் கொடுத்திருப்பது வெளிப்படை. என் மண் என் மக்கள் நடைபயணத்திற்கு இடையூறு செய்ய, ஆளுங்கட்சி பல முயற்சிகள் மேற்கொண்டு வருவதும், மக்களின் பேராதரவால் அவை தொடர்ந்து பிசுபிசுத்துப் போவதும் தொடர்கதையாகி இருக்கிறது.

இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் நடந்த என் மண் என் மக்கள் நடைபயணத்தின்போது. பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டதாகக் கூறி, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக காவல்துறை.

என் மண் என் மக்கள் நடைபயணத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் சாதனை குறித்த விவரங்களையும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விவரங்களையும் துண்டறிக்கைகள் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், மேலும், தமிழக பா.ஜ.க.வில் இணைய விருப்பமுள்ளோருக்கு உதவவும், பா.ஜ.க. சகோதர சகோதரிகள் ஆங்காங்கே சிறு தளங்கள் அமைத்திருப்பது வழக்கம்.

குறிப்பிட்ட தினத்தன்று காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவரும், அந்தப் பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்து விட்டார்கள் என்ற தவறான தகவலை அந்தப் பகுதியில் இருந்து பிறர் பரப்பியதன் அடிப்படையில், இருவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக நான் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது.

தமிழகக் காவல்துறையினரைப் பொறுத்தவரை, உலக அளவில் எந்த நாட்டுக் காவல்துறையினருக்கும் சற்றும் குறைவில்லாத திறமையுடையவர்கள். பொதுமக்களைக் காக்கும் பணியில் ஓய்வு, உறக்கமின்றி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறவர்கள். இயற்கைப் பேரிடர்கள் காலத்தில் கூட தன்னலமின்றி களத்தில் இறங்கிப் பணியாற்றுகிறவர்கள் என்பதை சமீபத்திய சென்னை மற்றும் தென்மாவட்ட கனமழை நேரத்தில் கூட கண்டோம். தமிழகக் காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டிராவிட்டால், தமிழகம் நிச்சயம் ஒரு அமைதிப் பூங்காவாக நிலவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களால், அதிகாரத்தில் இருப்பவர்களின் அழுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்படுவது கீழ்மட்ட நிலையிலுள்ள காவல்துறை சகோதரர்களே. பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் பகுதியில், காவல்துறையினர் விசாரிப்பது என்பது வழக்கமான நடைமுறை. ஆனால், அதற்காக, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்களை, எந்த விசாரணையும் இன்றி பணியிடை நீக்கம் செய்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இரு உதவி ஆய்வாளர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினரையும், அவர்களைச் சார்ந்தவர்கள் அனைவரையுமே இந்த நடவடிக்கை பாதிக்கும்.

பல கனவுகளோடு சீருடை அணிந்து, இத்தனை ஆண்டுகளாகத் தங்கள் கடமையில் சிறிதும் தவறாது பொதுமக்களுக்காக உழைத்தவர்களுக்குக் கிடைக்கும் பரிசு, பணியிடை நீக்கம் என்றால், இளைஞர்கள் நாளை காவல்துறைப் பணியில் சேர எப்படி முன்வருவார்கள்? காவல்துறை சகோதரர்கள் மீதான இது போன்ற கடுமையான நடவடிக்கைகள், இளைஞர்களிடயே காவல்துறைப் பணிக்கான வேட்கையை அற்று விடும்.

பல ஆண்டுகளாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த தங்கள் பணிகளைத் திறம்படச் செய்து கொண்டிருக்கும் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இரு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மீதான இந்த பணியிடை நீக்க நடவடிக்கை மிக அதிகபட்சமானது என்பதால், தஞ்சை சரக மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள், தயவு செய்து அவர்கள் இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




Next Story