நடத்தையில் சந்தேகம்: இரும்பு கம்பியால் அடித்து பெண் படுகொலை- கணவர் கைது


நடத்தையில் சந்தேகம்: இரும்பு கம்பியால் அடித்து பெண் படுகொலை- கணவர் கைது
x
தினத்தந்தி 17 March 2024 1:57 AM GMT (Updated: 17 March 2024 7:11 AM GMT)

மனைவியை இரும்பு கம்பியால் அடித்து படுகொலை செய்துவிட்டு மாயமானதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மிதிலேஷ்குமார் (வயது 23). லாரி டிரைவர். இவரது மனைவி காஜோல்குமாரி (24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மிதிலேஷ்குமார், குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன் தொட்டி கிராமத்தில் தங்கி, தாசனபுரம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இதனிடையே காஜோல் குமாரி, எப்போதும் ஒரு வாலிபருடன் செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மிதிலேஷ்குமார் மனைவியிடம் கேட்டபோது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் காஜோல்குமாரி, செல்போனில் அந்த வாலிபருடன் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை மிதிலேஷ்குமார் கண்டித்துள்ளார்.

பின்னர் நள்ளிரவில் லாரியில் பாரம் ஏற்றிச்செல்ல குவாரியில் இருந்து மிதிலேஷ்குமாருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து குவாரிக்கு புறப்பட தயாரான மிதிலேஷ்குமார், மனைவியையும் குவாரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த மிதிலேஷ்குமார், இரும்புக் கம்பியால் மனைவியை சரமாரியாக அடித்து கொலை செய்துவிட்டு, வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை எதுவும் நடக்காதது போல் மிதிலேஷ்குமார், தனது மனைவி மாயமானதாக கூறி நண்பருடன் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்து குவாரியில் தள்ளிவிட்டதாக மிதிலேஷ்குமார் கூறினார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மிதிலேஷ்குமாரை கைது செய்தனர்.


Next Story