வளர்ச்சியில் தமிழ்நாடு பின்னோக்கி செல்கிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் தி.மு.க.வினரே போதைப்பொருட்களைக் கடத்துகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
நாட்டு மக்கள்தான் தங்களுடைய குழந்தைகள், வாரிசு என்று வாழ்ந்த தலைவர்கள் நம்முடைய தலைவர்கள். சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளராக வருவதற்கு தகுதியுடைய ஒரே கட்சி அ.தி.மு.க.. சாதாரண தொண்டன் எம்.எல்.ஏ. ஆகலாம், எம்.பி. ஆகலாம், அமைச்சர் ஆகலாம், ஏன் முதல்-அமைச்சராக கூட ஆகமுடியும் என்றால் அது அ.தி.மு.க.வில் மட்டும்தான்; வேறு எந்த கட்சியிலாவது அப்படி முடியுமா?.
காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க. அரசு தான் நல்ல தீர்வு கண்டது. மேகதாது அணை விவகாரத்தில், தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கால் தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிமேலாவது உச்சநீதிமன்றத்திற்கு சென்று மேகதாது அணையை கட்டவிடாமல் தடையைப் பெற வேண்டும். கடந்த 3 ஆண்டில் எந்தவொரு திட்டத்தையும் தி.மு.க. அரசு திறந்துவைக்கவில்லை. அ.தி.மு..க ஆட்சிகால திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைத்ததை தவிர, வேறு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.
தி.மு.க.வின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி பொதுமக்கள் வாக்களித்தனர். சேலம் மாவட்டத்தில் ஜவுளித்தொழில் நலிவடைந்து விட்டது. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி 40% உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அதிக கடன் வாங்கியதால், வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க. மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனை திசைதிருப்பவே மத்திய அரசு மீது புகார் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க.வினரே போதைப்பொருட்களைக் கடத்துகின்றனர். தி.மு.க.வினரே போதைப்பொருட்களைக் கடத்துவதால், அதன் விற்பனையை பொதுவெளியில் அவர்களால் தடுக்க முடியவில்லை. மக்களைப் பற்றி தி.மு.க.வுக்கு கவலையில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் போதிய நிவாரணம் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.