மனைவி உயிரோடு எரித்துக்கொலை: தீயில் கருகி கணவர் சாவு... குடும்ப தகராறில் விபரீதம்


மனைவி உயிரோடு எரித்துக்கொலை: தீயில் கருகி கணவர் சாவு... குடும்ப தகராறில் விபரீதம்
x
தினத்தந்தி 14 April 2024 10:21 AM GMT (Updated: 14 April 2024 12:01 PM GMT)

தங்கராஜூவுக்கும், மனைவி லதாவுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்தியலிங்கபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58). நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி லதா (50). இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் நவீன் (32). இவருடைய மனைவி செல்வி. இருவரும் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது இவர்கள் காரைக்குடிக்கு வந்திருந்தனர். இதே போல் தங்கராஜின் இளைய மகன் ராஜேஷ். இவரும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

தங்கராஜூவுக்கும், மனைவி லதாவுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தத்தில் இருந்த அவர், தன் மனைவி, மகன்கள் தன்னை புறக்கணிப்பதாக கருதி விரக்தி அடைந்தார். நேற்று முன்தினம் தங்கராஜ், 3 கேன்களில் பெட்ரோல் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார். இரவு அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலையில் எழுந்த தங்கராஜ் பெட்ரோலை தன் மீதும், தன் மனைவி மீதும் ஊற்றினார்.

திடீரென்று தன் உடலில் பெட்ரோல் ஊற்றியதால் தூக்கத்தில் இருந்து விழித்த லதா பதற்றம் அடைந்து அலறினார்.. அதற்குள் தங்கராஜ் தீப்பற்ற வைத்துவிட்டார். படுக்கை அறை முழுவதும் பெட்ரோல் ஊற்றப்பட்டு இருந்ததால் தீ மளமளவென பிடித்து எரிந்தது. லதாவும், தங்கராஜூம் அலறினார்கள். இவர்களது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்த மூத்த மகன் நவீன் இருவரையும் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. அவரும் பலத்த தீக்காயம் அடைந்தார்.

வீடே எரிந்ததால் மருமகள் செல்வி, குழந்தையை தூக்கிக்கொண்டு பின்வாசல் வழியே வெளியே ஓடியதால் உயிர் தப்பினார்கள். பின்னர் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தீயில் கருகி தங்கராஜூம், அவரது மனைவி லதாவும் பலியானார்கள்.

தீக்காயம் அடைந்த நவீனை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பார்வையிட்டு மேல் விசாரணை நடத்தினார். மாமனார் வீட்டுக்கு வந்த இடத்தில் தன் கணவரை பறிகொடுத்து விட்டேனே என செல்வி தனது குழந்தையுடன் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story