பெங்களூருவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 'பைக் டாக்சி' பயணம் பாதுகாப்பா? ஆபத்தா? பொதுமக்கள் கருத்து


பெங்களூருவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பைக் டாக்சி பயணம் பாதுகாப்பா? ஆபத்தா? பொதுமக்கள் கருத்து
x

தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்து போக்குவரத்து துறை எட்டி இருக்கும் அதீத வளர்ச்சியால் உலகம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடுகிறது. கையடக்க செல்போனின் உதவியோடு எங்கு வேண்டும் என்றாலும் போக முடிகிறது. எதை வேண்டும் என்றாலும் வாங்க முடிகிறது.

செயல்வீரன்

செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும் ஒரு செயல்வீரனைப் போல் செயல்பட்டு அது உதவிகளை செய்துவருகிறது.

அப்படி அறிமுகமான செயலிகள் மூலம்தான் 'கால் டாக்சி', 'ஆட்டோ', 'பைக் டாக்சி' போன்றவை இன்று வலைத்தள வழிகாட்டுதலுடன் இயங்கி வருகின்றன.

வழி தெரிய வேண்டியது இல்லை. மொழி தெரிய வேண்டியது இல்லை. பேரம் பேசவேண்டியது இல்லை. அய்யோ இவ்வளவு கட்டணமா? என்று மலைக்கவும் தேவை இல்லை. எல்லாமே கூகுள் பார்த்துக்கொள்கிறது.

போனில் அழைத்தால் வாசல் தேடி வருகிறார்கள். சிரமம் இல்லாத பயணம் என்பதால் ஆன்லைனில் வாகனங்களை அழைத்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறைந்த கட்டணம்

சென்னை எழும்பூரில் இருந்து அண்ணாநகருக்கு கால் டாக்சியில் பயணிக்க ரூ.271, ஆட்டோவுக்கு ரூ.194 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பைக் டாக்சியில் பயணிக்க ரூ.102 மட்டும் கட்டணம் ஆகும்.

எனவே நெருக்கடியான போக்குவரத்து நேரங்களில் குறைந்த கட்டணத்தில் விரைந்து பயணிக்கலாம் என்பதால் 'பைக் டாக்சி'க்கு வரவேற்பு கிடைக்கிறது.

சொந்தமாக மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்கள் 'பைக் டாக்சி' நிறுவனத்தில் தங்களை இணைத்து, இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த 'பைக் டாக்சி' செயலியை ஏராளமானோர் பதிவிறக்கம் செய்து பயணித்து வருகிறார்கள். பைக் டாக்சியை ஆண்கள் ஓட்டினாலும் பெண்களும் சகஜமாக பயணிக்கிறார்கள்.

முன்பின் தெரியாத ஒருவருடன் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்யும் போது சில வேளைகளில் சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

சமீபத்தில் பெங்களூருவில் பைக் டாக்சியில் பயணம் செய்த கேரள இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் 'பைக் டாக்சி பயணம் பாதுகாப்பானதா? ஆபத்தானதா?' என்ற கேள்விகள் எழுந்து இருக்கின்றன.

இதுபற்றிய மக்கள் பார்வை வருமாறு:-

பெண்களுக்கு பெண்களே...

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்திகா:-

சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்குள் மிகுந்த சோர்வு ஏற்படுகிறது. அந்தளவுக்கு வாகன நெரிசல் நிலவுகிறது. எனவே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரங்களில் விரைவாக செல்வதற்கு 'பைக் டாக்சி' அவசியமானதுதான்.

ஆனால் பெங்களூருவில் 'பைக் டாக்சி'யில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை மிகவும் கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், ஒரு சிலரின் தவறுக்கு 'பைக் டாக்சி'யை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது.

'பைக் டாக்சி'யில் ஆண்கள்தான் பெண்களை அழைத்துச் செல்வார்கள் என்ற நிலை மாற வேண்டும். பெண்களை அழைத்துச்செல்வதற்கு இந்த தொழிலில் நன்கு 'மொபட்' வாகனங்கள் ஓட்டத்தெரிந்த பெண்களையும் ஈடுபடுத்த வேண்டும்.

எச்சரிக்கை ஒலி

ஆலந்தூரை சேர்ந்த 'கால் டாக்சி' டிரைவர் பரமசிவம்:-

வாடகை வாகனங்களில் 'ஆன்லைன்' ஆதிக்கம் வந்த பின்னர் எங்களால் போட்டியை சமாளிக்க முடியவில்லை. 'கால் டாக்சி' நிறுவனத்துடன் வாகனத்தை இணைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.

தற்போது 'பைக் டாக்சி' வந்த பின்னர் கால் டாக்சி தொழிலும் நலிவை சந்தித்து வருகிறது. அரசு அனுமதி இல்லாமலேயே பைக் டாக்சிகள் ஓடுகின்றன. எனவே இதில் அரசாங்கம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெங்களூருவில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவத்தை, 'பைக் டாக்சி' ஆபத்தானது என்பதற்கான எச்சரிக்கை ஒலியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரசைவாக்கத்தைச் சேர்ந்த லட்சுமணன்:-

தொழில்நுட்ப புரட்சி புதுப்புது தொழிலை உருவாக்குகிறது, வேலைவாய்ப்பை பெருக்குகிறது என்று பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் ஏற்கனவே இருந்த பாரம்பரிய தொழில்கள் அழிந்துவருவதை யாரும் கண்டுகொள்வதில்லை.

'ஆன்லைன்' வர்த்தகம் வந்த பின்னர் மளிகை, துணிக்கடைகள் போன்ற தொழில்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றன. செல்போன் 'ஆப்'கள், தொழில்களுக்கு ஆப்பு வைக்கின்றன.

மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்கள் 'பைக் டாக்சி' நிறுவனத்தின் செயலியில் பதிவு செய்துவிட்டாலே இந்த தொழிலில் இணைந்துவிடுகிறார்கள். இவர்களின் பின்புலம் என்ன என்பது தெரியாத சூழலில் இவர்களுடன் எப்படி பாதுகாப்பாக பயணிக்க முடியும்? 'பைக் டாக்சி' ஆபத்தானது.

அரசு முறைப்படுத்துமா?

சூளையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நரேஷ்:-

மாநகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வந்த பின்னர் ஆட்டோ தொழில் அடையாளத்தை இழக்கத்தொடங்கியது. போதிய வருமானம் இல்லாமல் ஆட்டோ டிரைவர்கள் பரிதவிக்கும் நிலை இருக்கிறது.

இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று 'பைக் டாக்சி' கோலோச்சி வருகிறது. ஆட்டோக்களுக்கு பர்மிட், எப்.சி. போன்ற நடைமுறைகள் இருக்கின்றன. ஆனால் 'பைக் டாக்சி'களுக்கு எந்தவித நடைமுறைகளும் இல்லை. அரசாங்க அனுமதி இல்லாமலேயே 'பைக் டாக்சி' இயங்குவது ஏற்புடையது அல்ல. எனவே 'பைக் டாக்சி'யை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும்.

வெளியூர் செல்வதற்கு பஸ்-ரெயில் நிலையங்கள் செல்லுதல், மருத்துவ சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லுதல் போன்ற நேரங்களில் கார்-ஆட்டோ பயணமே சிறந்தது, பாதுகாப்பானது.

முடிச்சூரை சேர்ந்த கார் டிரைவர் சாகுல் அமீது ராஜா:-

வாடகை ஆட்டோ-கார்களைவிட பைக் டாக்சியில் பயணக்கட்டணம் குறைவுதான் என்றாலும் அதில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். ஆட்டோ-கார்களில் அதிகம் பேர் பயணிக்கலாம். முக்கிய நிகழ்வுகளுக்கு 'பைக் டாக்சி'யில் செல்லும்போது மழை பெய்தால் நனைந்து பரிதவிக்கும் நிலை ஏற்படும்.

கடந்த ஆண்டு பைக் டாக்சியில் சென்றவரிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தொந்தரவு செய்ததுடன், அவரை செல்போனில் ஆபாசமாக திட்டிய சம்பவமும் நடைபெற்று போலீஸ் நிலையம் வரை புகார் சென்றதை அனைவரும் கவனிக்க வேண்டும்.

எனவே பாதுகாப்பு இல்லாத 'பைக் டாக்சி'க்கு அரசு ஒத்துழைப்பு வழங்கக்கூடாது.

'பைக் டாக்சி' ஓட்டுனர் கூறுவது என்ன?

'பைக் டாக்சி' ஓட்டிவரும் ஷேக் அகமது:-

நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தேன். எனது வாழ்க்கையை கொரோனா புரட்டிப்போட்டது. பின்னர் 'ஆன்லைன்' உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். இந்த நிலையில் 'பைக் டாக்சி' ஓட்டினால் போதியளவு வருமானம் கிடைக்கிறது என்பதால் இந்த தொழிலில் இணைந்தேன்.

தினமும் 12-க்கும் மேற்பட்ட சவாரி கிடைக்கிறது. அன்றாடம் ரூ.1,000 வருமானம் வருகிறது. சட்டென்று பக்கத்தில் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் எங்களை நாடுகிறார்கள். கார், ஆட்டோவைவிட பயண கட்டணம் மிகவும் குறைவு என்பதால் 'பைக் டாக்சி'க்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைகவசம் அணியவேண்டும் என்ற போக்குவரத்து போலீஸ் உத்தரவை நான் மறந்துவிட்டேன். அதனால் ரூ.1,000 அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டேன். தற்போது வாடிக்கையாளருக்கும் சேர்த்து தலைக்கவசம் வைத்துள்ளேன். பைக் டாக்சி பயணம் பாதுகாப்பானது என்பதை நன்கு உணர்ந்து ஆண்களைப் போன்று பெண்களும் சகஜமாக இதில் பயணிக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சொந்தமாக மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் எவரும் 'பைக் டாக்சி' தொழிலில் இணையலாம் என்ற நிலை மாற வேண்டும். இந்த தொழிலில் சேருபவர்களின் பின்புலம், அவர்கள் மீது குற்ற வழக்கு எதுவும் நிலுவையில் இருக்கிறதா என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆராய வேண்டும். அப்போதுதான் 'பைக் டாக்சி' பயணம் பாதுகாப்பானதாக அமையும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.


Next Story