குடியுரிமை திருத்த சட்டம்: மாநிலங்களவையில் ஆதரவு; தேர்தல் அறிக்கையில் எதிர்ப்பு - அதிமுக மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்துவிட்டு, தேர்தல் அறிக்கையில் அதிமுகவினர் எதிர்ப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி,
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்துவிட்டு, தேர்தல் அறிக்கையில் அதிமுகவினர் எதிர்ப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் ஆகியோரை ஆதரித்து, ஆரல்வாய் மொழியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “சரக்கு பெட்டக துறைமுகம் குறித்து முதலமைச்சர் தவறான தகவல் பரப்புகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள சரக்கு பெட்டக துறைமுகம் வராது என அதிமுக-பாஜக, தேர்தலுக்காக பொய் கூறுகிறது. ஆனால் அதற்கான டெண்டர் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் நிம்மதியான வாழ்க்கை வாழமுடியும் எனக் கூறினர். ஆனால் 7 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா தொற்று 2வது அலை ஏற்பட்டுள்ளதால் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். உரிமையை காப்பதற்கு திமுக; உயிரை காப்பதற்கு முககவசம். குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்துவிட்டு, தேர்தல் அறிக்கையில் அதிமுகவினர் எதிர்க்கின்றனர்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் இதில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் தான் நம்மை எதிர்த்து களம் காண்கிறார். பொன்.ராதாகிருஷ்ணன் 2014-ல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்தியில் அவர் அமைச்சராகவும் இருந்தார். இந்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு எதாவது நன்மை செய்திருக்கிறாரா. இப்போது மீண்டும் தேர்தலில் நிற்கிறார் அவர் தோற்கத்தான் போகிறார் அதில் எந்த சந்தேகமும் இல்லை. தேர்தலின்போது அவர் கொடுத்த எந்த உறுதிமொழியையாவது அவர் அமைச்சராக இருந்த போது நிறைவேற்றியிருக்காரா” என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story